பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 15கல்வி என்பது ஆன்மாவில் ஏற்றப்படும் ஒரு ஒளி! அணையாது ஒளிவிடும் ஒளி! கல்வி, மனிதனின் பொறி, புலன்களுக்கு அர்த்தம் கற்பிப்பது; படைப்பாற்றலை வழங்குவது; அறிவியல் ஆளுமையை வழங்கி, மனிதனை முழுமைப்படுத்துவது; மானிடம் வெற்றி பெறத் துணையாய் அமைவது.

இன்றைய கல்வி இப்படியா இருக்கிறது? மூளையில் செய்திகளைத் திணிக்கிறார்கள். வினா — விடைகளாக உருப்போட வைக்கிறார்கள்; நினைவாற்றலைச் சோதிக்கிறார்கள். மதிப்பெண் வழங்குவதிலும் “தர்மம்” புகுந்திருக்கிறது. தன்னம்பிக்கையும், திறமையும், ஆளுமையும் இம்மியும் இல்லை! ஆதலால், எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் சான்றிதழ்களைத் தூக்கிக் கொண்டு “வேலையோ வேலை” என்று அலைகின்றார்கள்.

இதற்காகவா பட்டம் என்று, கவிஞர் குலோத்துங்கன் கேட்கின்றார். “பட்டம் என்பது வருந்தப் பாடுபடாமல் உண்பதற்குரிய உரிமமா?” என்று கேட்கின்றார். ஏன்? எதனால்? என்று ஆழ்ந்துணரும் இயல்பாவது இருக்கிறதா? அதுவும் இல்லை.

“தினை தின்ற கோழி தினையாகக் கழியும்” என்ற பழமொழியைப் போலக் கற்றதை ஒப்புவித்தல்! அவ்வளவுதான் இன்றைய படிப்பு!


“பட்டமெலாம் மெய்வருந்திப் பாடுபடா
வாழ்வுக்குப் பாதை காணும்
திட்டமென முடிந்ததுவோ! தெளிவில்லேன்
ஆழ்ந்துணரும் திறமை காணேன்!”

(குலோத்துங்கன் கவிதைகள் பக். 26)

என்பது கவிஞர் குலோத்துங்கனின் கவிதை.