பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கல்வி என்னென்ன தரவேண்டும்? கல்வி பெருமையைத் தரவேண்டும் புகழைத் தரவேண்டும்! நாளைய வாழ்க்கையை நல்வாழ்க்கையாக அமைக்க வேண்டும். இத்தகைய கல்வி அறிவாண்மையைத் தரும். ஆய்வுப் படைவீடு அமைக்கப் பெறுதல் வேண்டும் என்பது கவிஞர் குலோத்துங்கனின் ஆசை. இதோ பாடல்,

“பெருமையும் புகழும் நாளைப்
பெற்றியும் உயர்ந்த கல்வி
தரும்எனத் தெளிவோம் ஆய்வுச்
சாலைநம் படைவீ டென்போம்”

(குலோத்துங்கன் கவிதைகள் 80)


இந்தக் கவிதை என்று நடைமுறையாகும்? நமது மக்களும் அரசும் ஆசிரியப் பெருமக்களும் இந்தக் கவிதையை உணர்ந்து நல்ல ஆளுமைத் தன்மையுடைய கல்வியை வழங்க முன்வருதல் வேண்டும். இது தவிர்க்க இயலாத அவசர அவசியக் கடமையாகும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்தல் வேறு! பிழைத்தல் வேறு. “வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே!” என்ற திருவாசகத்தின் நுண்பொருள் தெளிக! “சீச்சி நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” என்ற பாரதியின் திட்டுதலையும் நினைவிற் கொள்க!

ஆதலால், வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்க்கை அகநிலையிலும் புறநிலையிலும ஓயாது போராடும் தன்மையுடையதாக நிகழின், வாழ்வு செம்மையாக அமையும்!