பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20 தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆம்! உலகத்தை இயற்றும் உன்னதமான ஆற்றல் உழைப்பிற்கு உண்டு. உழைப்புக்கு ஈடாக உலகத்தில் பிறிதொன்றில்லை! உழைப்பே உலக வரலாற்றில் உயிர்ப்பு! “கைவருந்தி உழைப்பவர் தெய்வம்” என்றான் பாரதி எங்கே உழைப்பிருக்கிறதோ, அங்கே மனத்திற்கு ஊசலாட்டமில்லை!

உழைப்புள்ள இடத்தில் மனம் தூய்மையாக இருக்கும். உழைப்பாளர் மனம், இறைவனின் சந்நிதியாகும். உழைப்பாளிகள் வாழ்வர்; வாழ்வித்து வாழ்வர், உழைப்பாளிகள் யாரொருவருக்கும் தீங்கு செய்யார். இக் கருத்துக்களை அழகுற விளக்கும் பாடல் ஒன்று இதோ;

“உழைக்கின்ற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது - மனம்
கீழும் மேலும் புரளாது”

இது பட்டுக்கோட்டையின் பாடல், உழைப்பு ஆற்றல் வாய்ந்தது. நல்ல ஆற்றல் வாய்ந்த உழைப்பாளி வாய்ப்புக்களை எதிர்பார்த்துக் காத்திருக்க மாட்டான். அவனே வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வான்.

உழைக்கும் உள்ளம் பெற்ற ஒருவன் தனக்கு வாய்த்திருக்கிற கருவிகள், களங்கள், வசதிகள் ஆகியவை பற்றிக்கூடக் கவலைப்பட மாட்டான்! “பொறியின்மை யார்க்கும் பழியன்று” என்ற வள்ளுவம், இவன் வாழ்க்கையின் விளக்கம். ஏன், உடலில் ஊனம் இருந்தால்கூட அவன் அஞ்சுவதில்லை. திடமான மனத்துடன் திறமை சான்ற உழைப்பைச் சாதனமாகக் கொண்டு உலகில் வெற்றி பெறுகின்றான்.