பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 27

களும் எப்படியும் பணம் பண்ணுவது என்று வெறி உணர்வோடு மும்முரமாக முனைவது சகஜமாகியுள்ளது கால ஓட்டத்திலே.

“பணம் இல்லாமல் இருப்பதுதான் பாவம். இன்றைய சமுதாயத்தில் பணம் பண்ணத் தெரியாமல் இருப்பதுதான் குற்றம். நானும் வாழ வேண்டும். சுகமாக, வசதியாக, வெற்றிகரமாக வாழ்கிற பலரையும்போல் வாழவகை செய்யவேண்டும் என்று பாஸ்கரனும் ஆசைப்பட்டான்” என்று வல்லிக்கண்ணன் தன் பாத்திரத்தின் மூலம் இன்றைய பண மதிப்பீட்டுச் சமுதாயத்தின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

தனி மனிதன், சமூகம் இவர்களில் யார், யாருக்கு ஆதாரம்? சமூகத்தைத் துறந்து காட்டுக்கு ஓடிப்போவது தான் பெருமைக்குரிய விஷயமா? மனச்சாட்சி என்பது என்ன? அதற்குரிய மதிப்பு என்ன? என்றெல்லாம் ஆராய்ந்தறிவது அவசியம். தனிமனிதன் கணக்களவில் - எண்ணிக்கை அளவில், ஒரே ஒரு மனிதன்தான்! ஆயினும், அவன் பிறந்து வளர்ந்து வாழும் சமூகம் - சமூகத்தின் நிகழ்வு அவனிடத்தில் ஏராளமான தாக்கங்களை - பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

“மனித உலகத்தைத் துறந்து ஓடுவது துறவறமன்று. மனித சமூகத்திற்குள்ளேயே வாழ்ந்து கொண்டு, மனித சமூகத்தைப் புரிந்துகொண்டு, மனித சமூகத்தின் துன்ப நீக்கத்துக்காகப் பாடுபடுபவர்களே ஞானிகள்” என்றான் கதே என்ற தத்துவஞானி!

இந்த கருத்தை, ஜெயகாந்தனின் “கருங்காலி” என்ற சிறுகதையில் வரும் கோவிந்தன், ராகவனிடம் கூறும் பாங்கில் கேட்டுத்தான் பாருங்களேன்!