பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 29

ஆதலால், அவருடைய மனச்சாட்சி மட்டுமே ஆய்வு அளவையில் எடுத்துகொள்ளக் கூடியது. தனிமனித மனச்சாட்சி என்பது சமூகத்தின் மனச்சாட்சியோடு ஒத்திருக்க வேண்டும். அதாவது, “ஒருவர் கூறுவது, சமூகம் ஏற்றுக்கொள்ள தக்கதாக இருக்க வேண்டும்” என்பது மாவீரன் மாஜினியின் கருத்து.

ஜெயகாந்தனின் படைப்பாகிய ‘கருங்காலி’யில் ஒருசில வரிகள்,

“தனிமனித மனச்சாட்சி, சமூக மனச்சாட்சிக்குக் கொஞ்ச காலமாவது கட்டுப்பட்டுத்தான் ஆகணும். அந்த தனிமனிதனின் நியாய வாதம் உண்மையிலேயே தர்மமா இருந்தா அதை நிச்சயம் சமூகம் கொஞ்சம் பொறுத்து ஏற்றுக் கொள்ளும். அப்படியும் சமூகம் ஏற்றுக் கொள்ளலேன்னா அது தர்மம் அல்ல; ஆமாம், தர்மத்துக்கு அதுதான் இலக்கணம்”

ஜெயகாந்தனின் இந்தக் கருத்திற்கேற்ப நாம் சமூகத்தின் மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடுப்போமா?

சமூகம் என்ற சொல், இன்று கிட்டத்தட்ட சமுதாயத்தின் ஒரு பகுதியை, ஒரு சிறு ஜாதி வழிப்பட்ட கூட்டத்தைக் குறிக்கும் சொல்லாகவே வழங்கப்படுகிறது. ஆனால், இலக்கியங்களில் சமூகம் என்பது மனிதகுலம் என்ற பொருளில்தான் வழங்கப்படுகிறது. பாவேந்தன் பாரதிதாசன்,

“ஒன்றே சமூகம் என்றெண்ணார்க்கே இறுதி! உறுதி!
உறவினர் ஆவார் ஒருநாட்டார் - எனல் உறுதி!