பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பிறவியில் உயர்வும் தாழ்வும் செய்தல் மடமை! இந்தப்
பிழை நீக்குவதே உயிருள்ளாரின் கடமை!”

என்று பாடுவான்!

பாவேந்தன் கருத்துப்படி சமூகம் என்பது நாடு, மொழி, சமயம் கடந்தது. சமூகம் என்பது மாந்தர் கூட்டமேயாம். ஆனால், நமது நாட்டின் சமூக வரலாறு கூறுவது என்ன? மாந்தரிடையே தீண்டாமை, உயர்வு, தாழ்வு என்ற வேற்றுமைகள்! இந்த அடிப்படையிலான பேதா ஓபேதங்கள் பிரிவினைகள்! இன்று நம் கண்முன் காட்சியளிக்கும் சமுதாயம் ஓருருவும், ஓருணர்வும் உடையதன்று. இதனை மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,

“உச்சி மலையிலே ஊறும் அருவிகள்
ஒரே வழியிலே கலக்குது!
ஒற்றுமை யில்லா மனிதகுலம்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது!”

(பட்டுக்கோட்டை பாடல்கள் பக். 18)

என்று மிகவும் அழகாக உணர்த்துகின்றார். மானிட சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்து, ஒட்டி உறவாடி வாழ்ந்தால்தான் வளரலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒதுக்குதல் - ஒதுங்குதல் என்ற கொள்கை அறவே கூடாது. மானிடத்தோடு ஒட்டி வளர்ந்தாலே உயரலாம்; உயர முடியும். இந்த அழகிய கருத்தினை மூங்கில்கள் மூலம், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை விளக்கிக் கூறும் பாடல் இதோ: