பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 31
 “ஓங்கி வளரும் மூங்கில் மரம்
ஒன்னை ஒன்னு புடிச்சிருக்கு!
ஒழுங்காகக் குருத்து விட்டு
கொள்ளை கொள்ளையா வெடிச்சிருக்கு!
ஒட்டாமே ஒதுங்கி நின்னால்
உயர முடியுமா? - எதிலும்
ஒத்துமை கலைஞ்சுதுன்னா
வளர முடியுமா?”

(பட்டுக்கோட்டை பாடல்கள் பக். 19)

இனிய அன்பர்களே! பட்டுக்கோட்டையின் பாடல். அனுபல்லவி போன்ற பாடலாகும். ஏனெனில், இதற்கு முன்பு, இதுபற்றி நமக்கு எடுத்துக் கூறியவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள்! அவர்கள் கூறியவற்றை நாம் செவிமடுக்கவே இல்லை! இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குச் சாதியை, சாதிக் கலவரங்களைக் காப்பாற்றப் போகிறீர்கள்! இது என்ன நாம் செய்த ஊழா? அல்லது மற்றவர்கள் செய்த கர்ம வினைதான் இவ்விதம் வந்து மூண்டிருக்கிறதா?

ஆறு! வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் ஆறு! ஆற்றோட்டத்தின் ஒதுக்குப்புறத்தில் சிறு குழிகள்! அச்சிறிய குழிகளில் ஆற்று வெள்ளத்தோடு வரும் மாசுகள் அடையும்! இந்த உவமை, பாரதியின் உவமை. பாஞ்சாலி சபதத்தில் பாரதி எடுத்தாளும் உவமை.

ஆம்! பாண்டவர்களின் துன்பத்திற்கு அவர்களின் ஊழ் காரணமன்று. சகுனி, துரியோதனன் முதலியோருடைய கர்மப்பயன் பாண்டவர்களை வந்து வருத்துகிறது.