பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 37
 

தில் இருப்பவர்கள்கூட கேட்டுவிடுகிறார்கள். இதனைத் திறமை என்று வேறு பலர் மதிக்கின்றனர். இது ஒன்றும் திறமை இல்லை. வீண் பகடித்தனம். எடுத்துக்கூறும் நியாயங்களை எடுத்துக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். அன்றுதான் நியாயத்தை நோக்கி, சமுதாயம் நடைபோடும்.

விவாதத்திலும் ஒரு சரியான நடைமுறை கையாளப் பெறவேண்டும். கிளர்ச்சி நோக்கத்தோடு விவாதித்தல் கூடாது. விவாதம் செய்தவரை மடக்கி, மண்டையில் அடித்து உட்கார வைக்கும் இழி மனப்பான்மையுடனும் விவாதிக்கக் கூடாது. விவாதத்தில் ஈடுபடுவோரிடையே நம்பிக்கையும் நல்லெண்ணமும் நிலவ வேண்டும்.

விவாதத்தின் நடைமுறை விதிகளைப் பின்பற்ற வேண்டும்: ஒவ்வொரு மனிதனுக்கும் மூளை — சிந்தனைப் புலன்கள் இருக்கின்றன. இவை நிச்சயமாக எல்லாருக்கும் ஒன்றுபோல இல்லை. விவாதங்களில் கலந்து கொள்ளுபவர்கள் இயற்கையில் உள்ள இந்த வேற்றுமைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

எவனொருவன், தான் பேசுவதுதான் நியாயம் என்று வரையறுத்துக்கொண்டு, முரட்டுத்தனமாகப் பேசுகின்றானோ, அவன் நியாயத்தை மீறுகிறவன். அவன் நியாயத்தை மீறுகிறவன் மட்டுமல்ல; அவன் உலகத்தில் பல அநியாயங்களை அரசியலிலும் சில்லறை கிளர்ச்சிகளிலும் தோற்றுவிப்பான் என்று வங்கத்துக் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் கூறுகின்றார். இதைத் தமது ‘நல்லவரன்’ என்னும் கதை வரிகளில் விளக்குவதைக் கேளுங்கள்.