பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

மனைவி வள்ளியம்மை ஆச்சி, 50 ஆண்டுக் காலம் இல்லறத்தில் வாழ்ந்திருக்கின்றார். ஆயினும் வைரவன் பிள்ளை, வள்ளியம்மை ஆச்சியைப் பற்றிப் பிரமாதமாக நினைத்தது கிடைத்தது. இதனைப் புதுமைப்பித்தன் கேலி செய்வதைக் கேளுங்கள்!

“மனைவி என்பது நூதன வஸ்துவாக இருந்து, பழகிய பொருளாகி, உடலோடு ஒட்டின உறுப்பாகிவிட்டது. ஒவ்வொருவரும் தமக்கு ஐந்துவிரல் இருப்பதை ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக் கொண்டா இருக்கிறார்கள்?”

—(புதுமைப்பித்தன் சிறுகதைகள் பக். 408)


பகை என்பது ஒருவர் பிறிதொருவரிடத்தில் மனம் மாறாத நிலையில் காட்டுகின்ற வெறுப்புணர்ச்சியைக் குறிப்பது. இந்தப் பகையுணர்ச்சி ஒரு பொழுதும் தனி மனிதனுக்கும் நன்மை செய்யாது; சமூகத்திற்கும் நன்மை செய்யாது.

அதனாலேயே வள்ளுவம், ‘பாழ் செய்யும் உட்பகை’ என்கிறது. கம்பன் ‘யாரோடும் பகை கொள்ளலன்’ என்றான். ஆம்! நம்முடைய பகைவன், நம்மாட்டுப் பகை கொண்டிருக்கலாம். ஆனால், நாம் அப் பகைவன் மீது பகை கொள்ளக்கூடாது. இது வாழ்க்கை நியதி.

இந்தப் பொல்லாத பகை இன்று வீட்டிலும் புகுந்து விளையாடுகிறது; நட்புக் களங்களிலும் புகுந்து விளையாடுகிறது. அரசியலிலோ சொல்ல வேண்டாம். எழுத்தாளர் அய்க்கண் தமது ‘வேர்’ என்ற கதையில், கணவன் - மனைவி தகராறைத் தீர்த்து வைத்த கருப்பையா அம்பலகாரர், ‘தாம் தகராறைத்தான் தீர்க்க முடிந்தது; பகைமையைத் தீர்க்க முடியவில்லை’ என்று கூறுவது சிந்திக்க வேண்டியது.