பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42 தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 


இன்று இந்திய சமூகம், மக்களாட்சி முறையை ஏற்றுக் கொண்டிருக்கிறது. மக்களாட்சி என்றால் என்ன? மக்களின் அதிகாரம்; மக்களுக்கு நன்மை செய்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகாரம் - ஆட்சி ஒப்படைக்கப்படுகிறது. பிரதிநிதிகளிடமும் அமைச்சர்களிடமும் உள்ள அதிகாரம் அவர்களுக்கு உரிமை உடையதல்ல; பொது மக்களுடையது.

மக்கள் தங்களுடைய செல்வத்தை — நிதியை — தங்களுக்கு நன்மை செய்து கொள்வதற்காக, தங்களால் தனித்தனியே நன்மை செய்து கொள்ள இயலாமையால் மக்கள், பொது நன்மையைச் செய்வதற்காக நிதியை அரசிடம் குவிக்கிறார்கள். அது மக்களுடைய நிதி. மக்கள் நலனுக்கு மட்டுமே செலவழிக்க வேண்டிய நிதி. இதுதான் மக்களாட்சி.

இந்த மக்களாட்சியில் மனித நேயம் இருக்க வேண்டும்; மக்களை மதிக்க வேண்டும்; மக்களின் உரிமையை மதிக்கவேண்டும்.

மக்களை மூடர்களாக — குடிகாரர்களாக — கெட்டவர்களாக ஆக்கும் வழியில் அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒருபொழுதும் துணை போகக் கூடாது. மக்களாட்சிக்கு சாமர்த்தியம் தேவைதான். ஆனால், சாமர்த்தியத்தைக் காட்டிலும் விவேகம் தேவை.

நெடிய பார்வையில் நெடிய நோக்கத்தோடு தமது மக்களுக்கு ஆக்கப் பணிகளைச் செய்யும் விவேகம் வேண்டும். கன்னட எழுத்தாளர் பேந்தரே விவேக மில்லாத மக்களாட்சி பயனற்றது என்று கூறுகிறார்.