பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 47

ஆலயங்களைத் தழுவி மக்கள் வாழ்ந்தனர். இது நமது பழைய வரலாறு; பழைய நாகரிகம். கறையான் புற்றில் கருநாகம் புகுந்ததுபோல நமது திருக்கோயில்களில் — நாமெடுத்த திருக்கோயில்களில், இடைக் காலத்தில் சாதி ஆதிக்கம் புகுந்தது; சன்மார்க்கம் வெளியேற்றப்பட்டது. உயர்சாதி மனப்பான்மை உடையோர் உள்ளே புகுந்தனர். சாமானியர்கள் வெளியே தள்ளப்பட்டனர்.

ஆலயங்களின் அகன்ற மண்டபங்களில் நடந்த பள்ளிகள், மருத்துவமனைகள் அகற்றப்பட்டன. அந்த மண்டபங்கள் தூங்குமூஞ்சிகளின் மண்டபங்களாக - வெளவால்களின் மாளிகைகளாக மாறின.

ஒரு சிறந்த பழந்தமிழ் நாகரிகத்தின் வீழ்ச்சியை எண்ணுங்கள் இந்தச் சிந்தனையை அறிஞர் அண்ணா நம்மிடத்தில் தோற்றுவிக்கிறார். ஆலயங்களைப் பற்றிப் பேரறிஞர் அண்ணா சொன்னதைக் கேளுங்கள்.

“ஆலயங்கள் கட்ட வேண்டியதுதான் அப்பா! ஆனால், அதன் அமைப்பிலே சில மாறுதல்கள் செய்துவிடவேண்டும். ஆயிரம்கால் மண்டபத்துக்கு ஆரம்ப ஏற்பாடாகிவிட்டது. அது கட்டி முடிக்க இன்னும் கொஞ்சம் வேலைதான் பாக்கி. முடிந்த பிறகு, அதனை வெளவால்கள் வாழுமிடமாக்கி விடாமல், சிறுவர்களுக்கு அதனைப் பள்ளிக் கூடமாக்கி விடலாம். .................. குளம் இங்கே வாழும் மக்கள் குளிக்குமிடமாகும்.” (அண்ணாவின் சிறுகதைகள் பக். 94)


மீண்டும் நமது ஆலயங்கள் இழந்த பழம் பெருமையை அடைவது எந்நாளோ?