பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

மனித சமுதாயம் வளர்ச்சிக்குரியது; மாற்றத்திற்குரியது. வளர்ச்சி. மாற்றத்திற்கு அடிப்படை. மாற்றம். வளர்ச்சியின் அளவுகோல். ஒரே வழி வளர்ச்சி இல்லாத மாற்றங்களும் நிகழ்வதுண்டு. இவை, புற நிலை மாற்றங்களேயாம் ; அகநிலை மாற்றங்கள் அல்ல.

மானுடத்தின் வாழ்நிலையில், அகநிலையில் ஏற்படும் மாற்றங்களே மானுடத்தின் குறிக்கோள்களை இனம் காட்டும்; நாகரிகத்தை நல்கும்; பண்பாட்டைத் தோற்றுவிக்கும்.

தமிழினம் காலந்தோறும் வளர்ந்து வந்துள்ள இனம். தமிழிலக்கியங்கள் காலந்தோறும் தமிழினத்திற்குச் சிறந்த குறிக்கோள்களை வழங்கி வந்துள்ளன. தமிழினம் ஓரினமாக வாழ்ந்து வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.

தமிழினத்தில் இனமானம், குடிசெயற்பண்பு மிகவும் குறைவு என்பதைத் திருக்குறள் வாயிலாக அறிய முடிகிறது. ஆதலால், தமிழினம் சமுதாயக் கூட்டு வாழ்வில் சாதனைகள் செய்ய இயலாது போனாலும் தனிமனித வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் தமிழினம் சிறந்து விளங்கியது; விளங்கிக் கொண்டிருக்கிறது. இது மறுக்க முடியாத உண்மை.