பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.2. பாரதி தடத்தில் பாரதம்!

தமிழ் மொழி காலந்தொறும் வளர்ந்து வந்திருக்கிறது. நாம் குறிப்பிடுவது மொழியின் வளர்ச்சியை மட்டுமல்ல; கருத்து வளர்ச்சியையும் கூட. தமிழிலக்கியங்கள் தோன்றி வளர்ந்த வரலாற்றை நோக்கின் இந்த உண்மை புலனாகும்.

தமிழ், இலக்கிய வளம் நிறைந்த மொழி; அற நூல்களும் நீதி நூல்களும் நிறைந்த மொழி; தத்துவ ஞான நூல்களும் தமிழில் நிறைய உண்டு. ஆதலால், தமிழர்கள் வளர்ந்து வந்துள்ளனர். தமிழ் மொழியும் வளர்ந்து வந்துள்ளது.

ஆயினும் இடைக்காலத்தில் ஒரு தேக்கம்! தமிழர்கள் பீடு இழந்தனர்; அரசுகளை இழந்தனர்; அடிமை களாயினர்.

இருள் நிறைந்த நிலையில் ஓர் எழுஞாயிறு தோன்றுகிறது; பலர் புகழ் ஞாயிறு தோன்றுகின்றது. அதுதான் பாரதி பாரதி, வரலாற்றில் இடம்பெற்ற கவிஞன் அல்ல - வரலாற்றை எழுதிய கவிஞன்!

பாரதி, உப்புக்கும் கூழுக்கும் பாடியவன் அல்ல! செத்த பிறகு கிடைக்கும் சொர்க்கத்துக்கும் பாடியவன் அல்ல. பாரதி, வாழும் மாந்தருக்குப் பாடினான்.