பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பாரதியின் பேச்சும் மூச்சும் பரத நாடு, பாரத நாட்டின் சுதந்திரம், பாரத சமுதாயத்தின் வாழ்க்கை

பாரதி பேசினான்; எழுதினான்; கவிதைகள் இயற்றினான்; சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்குபெற்றான். பாரதி, வாழ்வாங்கு வாழ்ந்த மனிதன்! இந்த மண்ணை, விண்ணகமாக்க வந்த கவிஞன்!

பாரதி, காலம் தந்த கவிஞன். இல்லை, இல்லை! காலத்தை உருவாக்கிய கவிஞன்! ஆம்! பாரதி, அடிமையாகவே பிறந்தான்; அடிமையாவே செத்தான்! அவன் சடலத்தின்மீது பாரதத் தாயின் மணிக்கொடியை போர்த்த முடியாமலே செத்துப் போனான்.

ஆயினும் பாரதி. நாடு சுதந்திரம் பெறும் என்று நம்பினான்! சுதந்திரப் பள்ளு பாடினான்! பாரதி, சுதந்திரக் காற்றைச் சுவாசித்தான்! பாரதியின் ஆன்மா விடுதலை பெற்றுவிட்டது! பாரதியின் கவிதைகளில் எழுச்சி இருக்கும்; ஏற்றம் பிறக்கும்! பாரதியின் கவிதை பற்றி கவிமணி,

“சொல்லுக்குச் சொல்லழகு ஏறுமே அடா - கவி
துள்ளும் மறிவைப் போலே துள்ளுமே, அடா!
கல்லும் கனிந்துகனி யாகுமே, அடாl - பசுங்
கன்றும்பால் உண்டிடாது கேட்குமே, அடா!”

என்று பாடினார்! பாரதியின் கவிதைகளில் சொல்புதிது! பொருள் புதிது!

“தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்”