பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



யோடு எண்ணுவதில், எழுதுவதில் பாரதி அனுபவித்த இன்பம் சொல்லிக்காட்டி ஒண்ணாதது.

இந்தியா, இந்தியர் - என்ற உணர்வுகளினூடே பாரதிக்கு, “பாரத ஜாதி”யை உருவாக்குவதில் இருந்த ஆர்வம் போற்றத்தக்கது. ஆம்! பாரத நாட்டில் வாழ்வோர் பாரத ஜாதி!

பாரதி காலத்தில் இந்தியா ஒரு பெரிய நாடு! பிரிவினைக்கு ஆளாகாத அகண்ட பாரதம் இருந்தது! பாரதத்தில் இந்துக்கள் வாழ்ந்தனர். பாரத ஜாதி, ஒரு மொழிக்கும் ஒரு மதத்திற்கும் உரியதல்ல! இது கலப்பு ஜாதி! குருநானக் இந்து - இஸ்லாமிய இணைப்பில் ஒரு புதிய மதமே உருவாக்கினார். அதுதான் சீக்கிய மதம்!

இந்துக்கள், முகம்மதியர்கள் ஜாதியில் நம்மவர்களே என்பது பாரதியின் கருத்து. அதுமட்டுமல்ல, இந்துக்களுக்கும் முகம்மதியர்களுக்கும் குருதிக் கலப்பு உண்டு என்றும் எழுதுகிறான்.

“பாரத ஜாதி ஒன்று” - என்ற கொள்கை பாரதியின் கொள்கை; உறுதியான நம்பிக்கை. பாரத ஜாதி ஒன்றுபட்டு நிற்கவேண்டும், பாரத ஜாதியினர் தமக்குள் இருக்கும் வேற்றுமைகளை முரசுபோல் பிரசங்கம் செய்து கொண்டிருக்கக் கூடாது என்று. பாரதி அறிவுறுத்துகிறான்.

பாரத தேசத்தில் விடுதலை உணர்ச்சி வளர்ந்து வருவதை, பாரதி விளக்கி, “பாரத நாட்டின் நவீன உணர்ச்சி” என்ற கட்டுரையில் எழுதுகிறான். இந்தக் கட்டுரை “இந்தியா” இதழில் வெளியான உப தலையங்கம்.