பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 61



தோப்புப் பெருத்து விளைநிலம்
பாழ்த்தது; தொண்டர்இறு
மாப்புப் பெருத்து மனநலம்
பாழ்த்தது; மாதர்களின்
மூப்புப் பெருத்து மலையாளம்
பாழ்த்தது; முப்புரிநூல்
பாப்புப் பெருத்து மதுரைத்
துரைத்தனம் பாழ்த்ததுவே!

என்ற பாடலைக் கூறுகிறார். இந்தப் பாடலைக் கூறுவதன் மூலம் பார்ப்பன வீட்டுப் பிள்ளைகள் நாடார் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு வர மறுப்பதை விளக்குகிறார்.

இந்தக் கட்டுரையை முடிக்கும்பொழுது, கிரீஸ் என்ற யவன தேசத்தைப் பற்றி, பைரன் என்னும் ஆங்கிலக் கவிஞன், “ஆகா! இந்த நாட்டின் இயற்கை காட்சிகள் எல்லாம் எவ்வளவு அற்புதமாகவும் அழகாகவும் இருக்கின்றன” என்று கூறியதை எடுத்துக்காட்டுகிறான்.

“கிரீஸ் தேசம் போல, ஆகம புரத்திலும் இயற்கை காட்சிகள் - மலையும், தோப்பும், நதியும், வானும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாதபடி அவ்வளவு சுதந்திரமாகவும் இனிமையாகவும் இருக்கின்றன. மனிதர் மாத்திரம் பரஸ்பரம் நாய்களைப் போலச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதிலும் இப்படித்தான் இருக்கிறது! தெய்வமே! இதற்கெல்லாம் விமோசனம் எப்போது வரும்?” என்று. கேட்கிறான்!