பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 63

பாரதி, சமுதாய மாற்றங்களுக்கெல்லாம் அன்பு உந்து சக்தியாக விளங்க வேண்டும் என்று கருதுகிறான். அன்பு, ஆற்றல்மிக்க கருவி என்பது பாரதியின் கருத்து. பாரதி, சாவைப் பற்றி எண்ணுகிறான். பயத்தோடு அல்ல!

“இந்த உலகில் வாழும் சில நாட்கள் அன்போடு வாழ்ந்துவிட்டுப் போகக் கூடாதா? பல கோடி இன்பங்கள் அமைந்த இந்த உலகில் வாழ்கிறோமே! இதற்கு, குடிக்கூலியாக - வாடகையாக அன்பைத் தரக்கூடாதா? பிறருக்கென முயலும் நோன்பு செய்யக் கூடாதா? என்றெல்லாம் கேட்கிறான்!

பாரதி, தனது கேள்விகளுக்கு விடையில்லாமல் போகவே, இந்த உலகத்தைக் கூர்ந்து நோக்குகிறான்! அடடா மனித உயிருக்கு எத்தனை எத்தனை கஷ்டம்? கொலை, துரோகம்! ஐயகோ, எத்தனை அநியாயம்? ஐயோ, பாவம்!” என்று சொல்லிவிட்டு, மனிதர்களுக்கு வாழும் நெறிகள் சிலவற்றை அறிமுகப்படுத்துகிறான்.

“மனிதர்களே! நமக்குள் ஒரு கட்டுப்பாடு செய்து கொள்வோமே! அந்தக் கட்டுப்பாடு யாதெனில், ஒருவனுக்கு ஒருவன் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை, பயப்படுத்துவதும் இல்லை; பயப்படுவதும் இல்லை.

மனிதர்களே! இந்த விரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! இதுவே, பிழைக்கும் வழி வாழும் நாட்கள் சிலவே! இந்த நாட்கள் சிலவற்றுக்குள்ளும் கலகம் செய்து வாழ்வானேன்? இதனால் யாருக்கு என்ன பயன்?