பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மாந்தர்களே! கேளுங்கள்! இவையெல்லாம் உங்களுக்கு வேண்டுமா? அடையலாம், அடைய முடியும்!

அதற்கு ஒரே ஒரு வழி! இவையெல்லாம் மற்றவர்களுக்கும் வேண்டும் என்று ஆசைப்படுங்கள். மற்றவர்கள் அடையத் துணை செய்யுங்கள்! வாழ்வித்து வாழ ஆசைப்படுங்கள்! மகிழ்வித்து மகிழ ஆசைப்படுங்கள்! நீங்கள் விரும்பியது எல்லாம் கிடைக்கும். ஐயமில்லை! இது சத்தியம்!

அன்புண்டானால் இன்பம் உண்டென்று புத்த பகவான் கூறினார். அன்பு, தத்துவம் அல்ல! கொள்கையல்ல! கோட்பாடல்ல! அன்பு, செயல்! அன்பு செயல் வழிப்பட்டது!

அன்பென்னும் தவம் வளர, உயிர்க் குலம் ஆண் - பெண் என்று இருபாலாகப் படைக்கப் பெற்று இயங்குகிறது. ஒன்றின்பால் பிறிதொன்றினுக்கு ஈர்ப்பு, கவர்ச்சி தேவை. எல்லாம் அமைவாகப் பொருந்திக் கிடக்கின்றன. ஆனால், மனிதன் இந்த இயற்கையோடு இசைந்த அன்பு வாழ்க்கையையும் கெடுத்துவிட்டான்! கெடுத்துக் கொண்டிருக்கிறான்.

மனிதன் வாழ்க்கையில் பங்கேற்றுத் தியாகங்கள் செய்யும் மகளிரை வாழவிடுகிறானா, என்ன? பாரதி. மகளிரின் உரிமை நலன்களுக்காக எழுதினான்; பேசினான்; போராடினான்!

ஏன்? ஒருபடி மேலே போய் விவேகானந்தர் சந்நியாசியாகப் போகாமல் இல்லற வாழ்க்கையை ஏற்றிருப்பாரானால் மனித குலத்தைப் பற்றியிருந்த கலி வேரோடும், வேரடி மண்ணோடும், கல்லி எறியப் பட்டிருக்கும் என்பது பாரதியின் நம்பிக்கை.