பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.ஆயிரம்தான், முற்போக்குச் சிந்தனை இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் தமிழினத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் இனமான உணர்வு தேவை என்பதையும் உணர்ந்து பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் பற்றியும் எழுதப் பெற்றுள்ளது.

பேரறிஞர் அண்ணா காலத்தில் தமிழர்களுக்கிடையில் இன உணர்வு வளர்ந்தது; உறுதிப்பட்டது. பேரறிஞர் அண்ணாவைப் போல் தமிழின உணர்வுக்குத் தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னும் யாரும் இல்லை. இனிமேலும் தோன்றுவார்களா என்பது ஐயப்பாடே! இங்ஙனம் தமிழ்ச் சமுதாய அமைப்புக்கு உரமூட்டும் வகையில் எழுதப்பெற்றுள்ளது.

வழக்கம்போல் நமது நூல்களை வெளியிடுவதில் குடும்பப் பாங்குணர்வுடன் நோன்பெனக் கருதிச் செய்யும் இனிய அன்பர் கலைவாணி புத்தகாலய உரிமையாளர் கவிஞர், கெழுதகை நட்புக்குரிய திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களுக்கு நன்றி பாராட்டு வாழ்த்துக்கள்!

பலரும் புத்தகத்தை வாங்கிப் படிப்பார்கள், பயனடைவார்கள். தமிழினம் ஓரினமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அடிகளார்.

குன்றக்குடி
27-12-93