68 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அது ஒருபோதும் நடக்க மாட்டாது” என்று நிவேதிதா தேவி கூறியபடி தேசாபிமானிகள் ஒழுகினால் நாட்டுக்கு நல்லது ஏற்படும்” என்று எழுதுகிறான்.
இந்தியா ஆழ்ந்த உறக்கத்தில் கிடப்பதற்கு மிகுதியும் காரணம் விதி வாதமே! பாரதி, விதி கொள்கைக்கு உடன்பட்டான்; ஆயினும்: நடைமுறை வாழ்க்கையில் மாறுபடுகிறான்!
விதி, விதி என்று சும்மா கை கட்டி கீழ்நிலையில் வாழ்வாரைக் கடுமையாய்க் கண்டிக்கிறான்.
“விதி என்பது உண்டு. ஆனால், கடவுளால் எனக்கு அருளப்பெற்ற சுய இச்சை விதி வாதத்தை மறுக்கவில்லை” என்பது பாரதியின் கொள்கை.
தனது இச்சை, சுயேச்சையானது. அதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்பது பாரதியின் கோட்பாடு. பாரதி, விதியை விவேகத்தால் மாற்றலாம் என்றே நம்புகிறான்; நம்மையும் நம்பச் சொல்லி முயற்சி மேற்கொள்கிறான்.
மானிடம் சிறப்புடன் வாழ, விவேகத்துடன் வாழ்ந்து வெற்றிகளைப் பெற்று குவித்திட கல்வி தேவை. பாரதி, இன்றையக் கல்விமுறை இளைஞர்களை கிழவர்களாக்கும் கல்விமுறை என்று சாடுகிறான்! அதுமட்டுமா? இன்றையக் கல்வியை எண்ணி அவமானப்படுகிறான்.
பாரதி, வாழ்ந்த காலத்தில் இருந்த கல்விமுறை, நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் ஒன்றும் மாறிவிடவில்லை.