72 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பாரத தேச மக்கள் வீரியத்துடன் வளர வேண்டும். வாழ வேண்டும். இது பாரதியின் ஆசை. பாரதி, பழைய வீரர்களின் பட்டியலைத் தருகிறான். அஃது ஒரு நீண்ட பட்டியல். அர்ஜுனன், இராமன், இராவணன், காந்திஜி பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
பாரதி, வீரத்துக்குத் தரும் விளக்கம் என்ன? எடுத்த காரியத்தை இடையீடுகளையும் இடர்ப்பாடுகளையும் கடந்து முடிப்பது வீரத்தின் இலக்கணம். இது பாரதியின் கருத்து.
பாரதி காலத்தில் இந்த இலக்கணத்திற்கு பொருந்தியவர்கள் பலர் வாழ்ந்தனர். அதனாலேயே நாடு விடுதலை பெற முடிந்தது. இன்று நாட்டில் இத்தகைய வீரர்கள் வாழ்கிறார்களா?
இடரே இல்லை; உயிரைத் தரவேண்டியது. இல்லை. முறையாக வேலை செய்தாலே போதும். அதையே செய்யாமல் சோம்பலில் திளைத்துச் சிறு சிறு சுகங்களில் நாட்டங்கொண்டு அற்பத்தனமான ஆதாயங்களை எண்ணி கடமையைச் செய்யாமல் புறக்கணித்துப் பொழுது போக்குகிறவர்கள் ஏராளம்! ஏராளம்!
வீரர்களை ஞான வீரர், கர்ம வீரர் என்று பிரிக்கிறான் பாரதி. வசிஷ்டர், புத்தர், கிறிஸ்து ஞான வீரர்கள். சிவாஜிர் நெப்போலியன், காந்திஜி கர்ம வீரர்கள்.
சிவாஜிக்குப் பிறகு, நமது நாட்டில் வீரர்கள் தோன்றவில்லை என்று பாரதி வருந்துகிறான். ஆனந்தரங்கம் பிள்ளை போன்ற நிர்வாகிகள், துணைவர்கள்கூட கிடைப்பதில்லை என்று வருந்துகிறான்.