பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 79

சுதந்திரப் போராட்டத்தில் கணக்கற்ற சந்நியாசிகள், ஞானிகள் ஈடுபட்டிருந்தனர்.

பாரதி, சுப்பிரமணிய சிவாவின் தியாகத்தைப் போற்றுகிறான். “சந்நியாசிகள், ஞானிகள் லெளகீக முயற்சியில் பிரவேசித்து விபத்துக்குள்ளாவதன் முகாந்திரம் என்ன என்று பலர் ஆச்சரியமடைகின்றனர். அப்படி வியப்படைபவர்கள் கிருஷ்ணபகவான், வேத வியாசர், இராமதாஸ் முதலியவர்களின் சேவைகளைக் கவனிக்க வேண்டும்.

ஞானி, தனது சொந்த நலனைக் கருதி உழைக்கக் கூடாதே ஒழிய, உலக கர்மங்களை முற்றிலும் விட்டு விட வேண்டும் என்பது சாத்திரக் கருத்தன்று.

தன்மட்டில் யாதொரு பலனையும் கருதாமல் ஈசனுக்கும், ஈசுவர வடிவமாகிய மனித சமூகத்திற்கும் தனது செயல்களின் பலன்களை ஸ்மர்ப்பணம் செய்துவிட்டு. தான் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே சித்தாந்தம்” - என்று எழுதுகிறான் பாரதி.

இத்தகைய சந்நியாசிகள், ஞானிகள் போற்றத் தக்கவர்கள். இவர்களால் நாட்டின் வரலாறு நனி சிறக்கும்.

பாரதி ஆண்மை, வீர்யம், போராட்டம், யுகப் புரட்சி என்றெல்லாம் எழுதினாலும் மெளனத்தையும் வரவேற்கிறான். ஆனால் பாரதி வரவேற்கும் மெளனம், வலிமை சார்ந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.