பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 85
 

அறிஞர் அண்ணா இயல்பிலேயே சிந்தனையாளர்; நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். மணம் வீசும் மலர்; தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் பாசறையில் புடம்போடப்பட்டவர். அதனால் அந்த மலர் பொன் மலராயிற்று.

பொன் மலரில் புதுமை மணமும், பொதுமை மணமும் கமழ்ந்து வீசுகிறது. உலகியல் முறைப்படி தந்தையினும் தனயன் சிறந்து விளங்குகிறார்; தந்தைக்குப் பெரு மகிழ்வு ஊட்டுகிறார்; பொது மக்களின் புகழ்மாலையை வாங்கிச் சூடுகிறார்.

அறிஞர் அண்ணா புதுமையில் வேணவா உடையவர். ஆயினும் பழைமையை வெறுப்பவரல்லர். இங்ஙணம் கூறுவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? அண்ணாதுரைக்கா பழைமையில் வெறுப்பில்லை; இது புனைந்துரை! பொய்! என்று கருதுகிறீர்களா? நீங்கள் அப்படிக் கருதுவதில் தவறில்லை. ஏன்? இந்த நாட்டிலேயே பலர் அப்படித்தான் கருதுகின்றனர்.

ஆனால் நாம் கூறுவது உண்மை! சத்தியம்! வெறும் புகழ்ச்சியில்லை! அவர் பழைமையின் வெறுப்பாளர் அல்லர். ஆனால், உதவாப் பழைமைகளை ஒதுக்குகிறார்; நம்மையும் ஒதுக்கத் துரண்டுகிறார். உடைந்த பானையை, கிழிந்த பாயை, உயிரற்ற பிணத்தை யார்தான் பேணுவர்? அவை பயன்படா. அவற்றை ஒதுக்குவதே வாழ்க்கைக்குச் சிறப்பு.

அதுபோலவே நமது வாழ்க்கையின் வளத்திற்கும் ஏற்றத்திற்கும் பயன்படாத பழைமையை ஒதுக்குகிறார். “இறந்தது விலக்கல்” ஆன்றோர் மரபுதானே!