சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 87
அவருடைய இலக்கியப் படைப்பு மரத்துப்போன பழைமைக்கு கல்லறையாகும்; பூத்து வரும் புதுமைக்கு பூங்காவாகும்.
அவர் இலக்கியத் துறையிலும் சாதாரண மக்கள் பக்கத்திலேயே நின்றார். அவர் காப்பியங்கள் செய்யவில்லை; தோத்திரங்கள் செய்யவில்லை; துதி நூல்கள் செய்யவில்லை.
எளிய நடையில் அன்றாடப் பிரச்சனைகளை எழுதுகிறார்; கதையாக எழுதுகிறார்; கடிதமாக எழுதுகிறார்: கட்டுரையாக எழுதுகிறார்.
அண்ணாவின் படைப்பில் அன்றாடப் பிரச்சனைதானா? அன்றாடம் என்பது தனித்து நிற்பதில்லையே! அன்றாடத்திலேயே நேற்றும் உண்டு, நாளையும் உண்டு. அவர் தம் மனோ நிகழ்ச்சிகளை - அதாவது நேற்று, இன்று பலாபலன்களை, மனப் போராட்டத்தைக் ‘குமாஸ்தாவின் பெண்’ என்ற கதையில் காந்தா என்னும் பாத்திரத்தில் காண முடிகிறது.
அறிஞர் அண்ணாவின் படைப்புக்கள் பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாக வரவில்லை. பக்கம் பக்கமாக எழுதி, படிப்பவர்களுக்கு அலுப்பை உண்டாக்காமல், சுருக்கமாகவும் நேரிடையாகவும் எடுத்துக்கொண்ட கருத்துக்களைச் சொல்லும் கதை நூல்கள் அருமையேயாகும். அதை அண்ணாவின் கதைகளில் காணலாம்.
அறிஞர் அண்ணா, உலகம் மிகச் சிறந்த பல்கலைக் கழகம் என்ற மூத்த கருத்தின் முதல்வராகத் திகழ்கின்றார். அவர் நிறைய உலகத்திலிருந்து படித்துக் கொள்கிறார்.