பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



“உயர் ஜாதிக் குடியினரும் சிறப்பாக சமரச ஞானம் பேசுவார்கள். அதில் கைதேர்ந்தவர்கள் அவர்கள். ஆனால், எல்லாம் பேச்சளவில்தான். செயலில் இம்மியும் இல்லை. காரணம், இந்த பாகுபாட்டு முறைகள்தான் சிலரை வாழ்விக்கிறது. அதை எப்படி இழப்பார்கள்?” என்று கேட்கிறார்.

அண்ணா சமுதாயத்தில் நிலவும் ஜாதி வேறுபாட்டு முறைகளை மாற்றியமைக்க விரும்புகிறார். ஆனால், பொருளியல் சமத்துவ சமநிலைச் சமுதாயம் அமையாத வரை ஜாதி வேறுபாடுகளை முற்றிலும் நீக்க முடியாது என்பதையும் உணர்கிறார்.

ஆதலால் அவர் தமது இணையற்ற இலட்சியமாக சமதர்ம சமுதாய அமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதை அவருடைய படைப்புகள் தெளிவாகப் பேசுகின்றன.

மனித சுபாவம் என்பது இயற்கையுமல்ல; தெய்வமுமல்ல. அது சூழ்நிலையால் உருவாகி வளர்வதேயாகும். இதனைத் திருவள்ளுவரும் “இனத்துள்ளதாகும் அறிவு” எனறார்.

குமாரைப்பற்றி அவன் ஏழை - அவன் நிதியை எடுத்து ஏப்பம் விட்டுவிடுவான் என்றும், அது ஏழைகள் சுபாவம் என்றும் செல்வச் சீமான் பார்த்திபன் சொல்லுகின்றான். அறிஞர் அண்ணா தமது அருமையான படைப்பாகிய பார்வதியின் மூலம் உயிரோட்டமுள்ள உணர்வுடன், குபேரபுரியின் வாதத்தை எதிர்த்து, வாதாடுகிறார்.

“அந்தச் சுபாவம், பணக்காரத் தன்மை ஒருபுறமும் வறுமை மற்றோர்புறமும் இருப்பதால்தான் உண்டாகும். பனியிலே குளிருண்டாகும். வெய்யில் உடல் எரிச்சலைத்