பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 95
 

தருகிறது. வறுமையும் அப்படித்தான். அதை அனுபவிப்பவர்களுக்கு வேதனையூட்டி அவர்களின் சுபாவத்தை மாற்றுகிறது.

தர்ம பிரபுக்கள் என்று சிலரும், தரித்திர பூச்சிகள் என்று பலரும் இருக்கும் வரையில் சுபாவமும் அந்தப் பொருளாதார நிலைக்கு ஏற்றபடிதான் அமையும். அது குமாரின் குற்றமல்ல. மேலும் குமாரின் சமதர்ம பற்று ஆழமானது” என்று வழக்காடுகிறாள் பார்வதி.

அண்ணாவின் படைப்பில் உத்தமி மிதவாதப் போக்குடையவள். அவள் விதியை நொந்து கொள்கிறாள். அவள் உலகத்தின் போக்குக் கண்டு சமாதானம் செய்து கொள்கிறாள். “மழை பெய்யும் போது ஊருக்கெல்லாம் குடை பிடிக்க முடியுமா?” என்று அறியாமையின் வடிவமாக - ஆனால் வாதத் திறமை போலப் பேசுகிறாள்.

ஆனால், பார்வதியின் வாயிலாக அறிஞர் அண்ணா பேசுகிறார்; சமதர்மத்துக்காக வழக்காடுகிறார்; வாதாடுகிறார். “மானைத் தின்று புலி கொழுப்பது. போல் ஏழையின் உழைப்பை உறிஞ்சி முதலாளி கொழுக்கிறது யாருக்குத் தெரியும்? ஈவு இரக்கம் தயவு தாட்சண்யம் என்பவைகளை படுபாதாளத்திலே போட்டு விடுபவர்கள் தான் நாலடுக்கு, ஐந்தடுக்கு மாளிகையிலே உலாவுகிறார்கள்.

நமக்கு என்ன என்றிருக்க இந்த உண்மையை உணர்ந்த பிறகு மனம் எப்படி இடம் கொடுக்கும். தொட்டிலிலே தூங்கும் பாலகனை, கொட்டிடத் தேள் போனால், தேளை அடிக்காதிருப்பது நியாயமா?” என்று பார்வதியின் மூலம் நியாயம் கோருகிறார்.