பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

சமுத்திரக் கதைகள்


டிப்போ சாலைக்கு ஆயா வந்தபோது, வழிப் போக்கர்களும், வாக்கிங் ஆசாமிகளும் ஆயாவை பொழுதுபோக்காய் பார்த்தார்கள். கவிழ்ந்து நடக்கும் ஆமையை நிமிர்த்தி வைத்தது போன்ற கூன் போட்ட உடம்பு. அந்த ஆமையிலும் நட்சத்திர ஆமைபோல், காய்ப்புகளும், தேமல்களுமான உடம்பு... பறட்டைத்தலை... ஒடுங்கிபோன வயிற்றை துருத்திக் காட்டுவது போன்ற முரட்டுச் சேலையின் இரட்டை மடிப்புகள்.

ஆயாவுக்கு, டிப்போவில் ஒருத்தன் இருப்பதை பார்த்ததும் மகிழ்ச்சிதான். ராக்கப்பனா, குப்பனா என்று தொலைநோக்காய் கண்விலக்கி பார்த்தாள். வயதாகிப்போன கண்கள் பின்வாங்கின. இரண்டுபேருல எவன் இருந்தாலும் சரிதான். ராக்கப்பன் சவுக்கியமா ஆயான்னு கூட கேக்காமல் அவளோடு பங்கை எடுத்துக் கொடுப்பான். குப்பன் அவளுடைய நேற்றைய ராத்திரியை விலாவாரியா விசாரிச்சுட்டு அனுதாபமா உம் கொட்டுவான். பாத்திரத்தை ஒரே மூச்சுல தூக்கி, அவள் தலையில வைப்பான். சிலசமயம் வேடிக்கையா அவளோட இரண்டு கையையும் பிடிச்சு அந்தப் பாத்திரத்தின் ரெண்டு பக்கமும் ஒப்புக்கு வைத்துக் கொண்டே உயரத் தூக்கி வைப்பான். அந்த சைக்கிள்காரி நின்னா “உனக்கு இப்படி உதவட்டுமான்னு கேப்பான். உடனே அவள் “கரிமூஞ்சி ஆசையைப்பாரு’ என்று செல்லமாக சிணுங்குவாள். எல்லாருக்கும் சிரிப்பு வரும். கசிவுகளால் மெலிந்து போன பாலுறைகளின் ஆதங்கம் கூட காணாமல் போய்விடும்.

ஆயா ஓடோடினாள். டிப்போ பக்கத்தில் போனதும் அவளுக்கு மூச்சு வாங்கியது. அது நிலைப்பட்டதும் ஏறிட்டுப் பார்த்தாள். அவளுக்கு ஒரு ஏமாற்றம். ஆனாலும் அது அதிர்ச்சியாக வில்லை. டிப்போக்காரன் அத்தி பூத்தது போல் நின்றான். ஒரு சினிமா நடிகர் படம் போட்ட பனியன் சட்டை போட்டிருந்தான். காக்கா மாதிரியான சாய்வுப் பார்வை. அவன் கால்மாட்டில் மூன்று டிரேய்கள். வழக்கம்போல் மேல்நோக்கி தோன்றாமல் உள்ளடங்கிக் கிடந்தன. ஆயாவை பார்த்ததும் அவன் கத்தினான்.

“எவ்வளவு நேரமா உனக்காக காத்திருக்கது? ஏன் லேட்டு? இப்படித்தான் தினமும் வர்றியா?"