பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

X

வாழக்குருத்த வெட்டமாட்டோம்...” என்ற சக்கரையம்மாவின் பன்மைப் பேச்சோடு சண்டை முடிந்துவிடுகிறது. சமுத்திரக் கதைகள் தொகுப்பும்தான்.

03.

சமுத்திரத்தின் பல முகங்கள் இந்தத் தொகுப்பில் வெளிப்படுகின்றன - அமைதி விரும்பும் கோபக்காரர், பெண்ணியவாதத்தை முன்வைக்கும் ஆண். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டங்களை அனுபவபூர்வமாக அலசும் சமூக அறிவியல் விஞ்ஞானி, புதிய தலைமுறையின் குறைநிறைகளைப் புரிந்துகொண்டுள்ள உளவியல் அறிஞர், கல்மிஷமில்லா மனசுக்காரர், கிண்டல்காரரும்கூட - இப்படிப் பன்முகங்கள் இருப்பதாலேயே இவரின் கதைகளும் பன்முக வாசிப்புக்கும் விவாதத்துக்கும் இடமளிக்கின்றன.

இவரிடம் வார்த்தை ஜாலமில்லை, விரயமுமில்லை. வார்த்தைகள் ஆற்றொழுக்குப்போல் மனித மாண்பு என்னும் ஒற்றைத் திசைநோக்கிப் பயணிக்கின்றன. இவர் மனிதத்தை நேசிக்கும் எழுத்தாளர். உணர்ச்சிப்பூர்வமாய் இதயத்தில் சிந்திக்கும் எழுத்தாளர். வாழ்க்கையின் மேல் அபரிமிதமான பற்றுக் கொண்டுள்ள நம்பிக்கை எழுத்தாளர். இலக்கிய விசாரப் போதையில் மிதக்காமல், ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களோடு தன்னை இணைத்துக் கொண்டுள்ள செயல்படும் எழுத்தாளர்.

04.

சமுத்திரத்திற்கு எந்த முன்னுரையும் அணிந்துரையும் தேவையில்லை. இந்த உரையும் சேர்த்து. ஆனால் சமுத்திரக் கதைகளுக்கு முன்னுரை எழுத அவர் என்னைத் தேர்ந்தெடுத்தது எனக்குக் கிடைத்த பெருமை.

05.

சமுத்திரம் வற்றாது. கொஞ்சம் ஏற்றம் இறக்கம் இருக்கலாம் என்றாலும். எனவே அடுத்தடுத்த தொகுப்புகள் வரவேண்டும் வரும்.