பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

சமுத்திரக் கதைகள்


இப்படி வந்தியானால், இந்த இருட்டுல போலீஸ்காரன் உன்னோடு என்னையும் சேர்த்து கூட்டிட்டுப் போயிடுவான். சரி... வேட்டிய கட்டிக்கிட்டு ஒரு சட்டையை போட்டுக்கிட்டாவது வா.”

சிறிது நேரத்தில், சித்தப்பா, முத்துக்குமாரை அந்த வீடு உள்ள குறுக்குத் தெருவிற்கு கொண்டு வந்தார். இருள், மேகமாய் கவிழ்ந்திருந்தது. விட்டு விட்டு எரிந்த ஒரு தெருவிளக்கு மின்வீச்சுக்களாய் தோற்றங்காட்டின. பேச்சு மூச்சில்லாத மவுனம், அந்த இருளுக்கு அழுத்தம் சேர்த்தது. நடக்க நடக்க முத்துக்குமார் சித்தப்பாவிடம் தானாய், முதல் தகவல் அறிக்கையை வாசிப்பது போல் ஒப்பித்தான்.

“ஆபிசுல என்ன விட மேலானவங்க எத்தனையோ பேரு இருக்காங்க சித்தப்பா. அவள் மேல... அதான் அந்த மாயா மேல... பைத்தியமா இருந்தவங்களும் உண்டு. என்னை வி ட அழகானவங்க. உயர்ந்த பதவில இருக்கிறவங்க. ஆனா அவள், ஒதுங்கிக் கிடந்த என்னை தேடிப் பிடித்து காதலித்தாள். ஒருநாள் ‘நீ யார் கிட்டயும் பல்லைக் காட்டாதனால உன்கிட்ட பல்லைக் காட்டறேன்னு சிரித்துச் சொன்னாள். ஆபீசுல தாழ்வு மனப்பான்மையில தவித்த எனக்கு, அவள் ஒரு ஆறுதலானாள். முதல்ல, என்ன கடற்கரைக்கு இழுத்துட்டுப் போனது அவள்தான். அப்புறந்தான், நான் அவள சினிமா தியேட்டருக்கு இழுத்துதுட்டுப் போனேன். இப்ப என்னடான்னா, என்னை இழுபறில விட்டுட்டாள் சித்தப்பா.”

விக்கியும், திக்கியும், தட்டுத்தடுமாறியும் பள்ளிக்கூட மாணவன்போல ஒப்பித்த முத்துக்குமார், சிறிய நடைபயண நேரத்தில் சரளமாக பேசப்போனபோது, ஏழெட்டு மிருக உருவங்கள் கண்களில் தட்டுப்பட்டன. இருளின் அடர்த்திகளாக காணப்பட்டன. நிழலும் நிசமும் ஒன்றித்த நாய் வடிவங்கள். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் இருட்டில் வருகிறவர் தெரிந்தவராக இருந்தாலும், புரபஷனலாக குரைக்கும் இந்த நாய்கள், இப்போது பிஸியாய் இயங்கின. இவற்றை உற்றுப்பார்த்த சித்தப்பா, முத்துக்குமார் முகத்தை அந்த, நாய்க்கூட்டத்தின் பக்கமாக திருப்பி வர்ணித்தார்.