பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XII

முன்னுரையைப் படித்த பிறகு, என்னுரைகூட தேவையற்றதாகவே எனக்குப் படுகிறது. பேராசிரியர் ராஜநாயகம் நவீனத்துவ எழுத்தாளர். எளிமையும், இனிமையும் - அதே சமயத்தில் ஆழமும் ஒருங்கே பெற்ற படைப்பாளி. இவருடைய சிறுகதைத் தொகுப்புப்பான கடைசிப் பெய், புதினங்களான சில முடிவுகளும் சில தொடக்கங்களும், சாமிக்கண்ணு எனச் சில மனிதரின் கதைகள், நவீன தமிழ் இலககியத்திற்கு அணி சேர்ப்பவை. பிற படைப்பாளிகளால், நவீனத்துவம் எதிர்மறையில் செலுத்தப்படும்போது, அதை இழுத்துப்பிடித்து நெறிப்படுத்துபவை.

சமூகப்போராளியான பேராசிரியர் எழுதிய இந்த முன்னுரையின் வாசிப்பு, என்னை ஆங்கில இலக்கிய அறிஞர் பாஸ்வெல்லை நினைவுப் படுத்துகிறது.

ஆங்கில இலக்கிய மேதை டாக்டர். ஜான்சனை, பாஸ்வெல்லின் தயாரிப்பு என்று கூறுவார்கள். டாக்டர்.ஜான்சனின் வரலாற்றை எழுதியவர் பாஸ்வெல். ‘சரக்கு முடுக்கு' அதிகமாக இல்லாத டாக்டர் ஜான்சனுக்கு 'செட்டியார்' முடுக்கைகொடுத்தவர் பாஸ்வெல் என்பார்கள். இது உண்மையோ, பொய்யோ, என்வரைக்கும் இது நிகழ்ந்திருக்கிறது. பேராசிரியர். ராஜநாயகம் இந்தத் தொகுப்பை கட்டிக்காட்டியவிதம், என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கதாயாசிரியரான என்னை, உரையாசிரியரான அவர், நான் என்னை கண்டுபிடித்ததைவிட, அதிகமாக கண்டுபிடித்திருக்கிறார். இது பிற இலக்கியமுன்னுரைகளிலும் நிகழ்ந்துள்ளன.என்றாலும்,என்தொகுப்பு இந்த கருப்பொருளுக்கு, உரிப்பொருளாகி இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இப்போது முக்கியமான ஒரு ஆய்வில் ஈடுப்பட்டிருக்கும் பேராசிரியர் ராஜநாயகம் அவர்கள், இந்தத் தொகுப்பிற்கு நாட்களை ஒதுக்கி ஒவ்வொரு கதைக்கும் ஒரு திருக்குறளைபோல் தெளிவுரை எழுதி இருப்பது எனக்குக் கிடைத்த இலக்கியக் கெளரவம்.

வழக்கம்போல், இந்த நூலை அச்சடித்துக் கொடுக்கும் பொறுப்பை மேற்கொண்ட மணிவாசக நூலகத்திற்கு நன்றியுடையேன். எனது சிறுகதைகளை இன்முகத்தோடு வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர், பாலசுப்ரமணியன் அவர்களுக்கும், பொறுப்பாசிரியர் வி.யெஸ்.வீ. அவர்களுக்கும், ஓம் சக்தி பொறுப்பாசிரியர் கவிஞர் பெ. சிதம்பரநாதன் அவர்களுக்கும் மற்றும் பல முகமரியா உதவி ஆசிரியத் தோழர்களுக்கும், இந்தத் தொகுப்பிற்கு ஒலியச்சுதந்த என் உதவியாளர் விஜயகுமார் அவர்களுக்கும் நன்றி மறக்காத நன்றி. இந்தப் பட்டியலில் குமுதம், புதிய பார்வை, தாமரை ஆகிய பத்திரிகைகளையும் இணைத்துக் கொள்கிறேன்.

- சு. சமுத்திரம்