பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

சமுத்திரக் கதைகள்


பாருக்குட்டியை ஒரு பாயில் உட்கார வைக்கிறாள். தறவாட்டு பெண்ணொருத்தி, அவளுக்கு படையலில் உள்ள ஒரு வாழைப் பழத்தை எடுத்து வாயில் ஊட்டுகிறாள். இந்த “மதுரம் திண்டல்” என்ற வைபவம், பாருக்குட்டிக்கு கணவன் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று தங்குவதற்கு உரிமை அளிக்கிறது. நிரந்தரமாக தங்கமுடியாதுதான். ஆனால், தற்காலிகங்களே நிரந்தரமாக்கப் பட்டதில், மருமக்கள் தாயப் பெண்கள் அத்தனை பேரையும் போல, அவளுக்கும் கொள்ளை மகிழ்ச்சி.

என்றாலும், சாஸ்திர சம்பிரதாயம் வழங்கிய இந்த அரைகுறை வரத்தை காரணவானான தாய்மாமன் இடைமறித்து கிடப்பில் போட்டார். அவளது உரிமையை செயல்படுத்த வேண்டிய தனது கடமையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. பாருக்குட்டியும், தனது கணவன் வீட்டுக்குச் செல்வதற்கு, தனது தாயான குஞ்சம்மாவை அனுப்பி அவரிடம் அனுமதி கேட்டாள். அவர் அசைந்து கொடுக்காதபோது, இவளே ஏதோ ஒரு சாக்கில் அவரிடம் எதிர்பட்டு சாடைமாடையாக கேட்டு அசைக்கப் பார்த்தாள். அவர் பார்த்த பார்வையில், அவள் குடைசாயப் போனாள். எந்தப்.பதிலும் இல்லை. ஒரே ஒரு தடவை தாய்க்காரி வலுக்கட்டாயமாக உண்டா இல்லையா என்று கேட்டபோது, அவர் எனக்கு தெரியும் எப்போன்னு என்று மட்டும் பதில் சொன்னார்.

அந்த எப்போ என்பது “இப்போவாக இருக்கக்கூடாதா என்று பாருக்குட்டி, ஒவ்வொரு இரவையும் எதிர்பார்ப்பாய் கழித்து பகலில் அவர் பக்கத்தில் போய் நிற்பாள். அவரோ, அவள் அங்கே இல்லாததுபோல் அனுமானிப்பார். போதாக்குறைக்கு, இரவில் வந்து பகலில் திரும்பும் கணவன் சங்குண்ணியை, எள்ளும் கொள்ளுமாய் பார்ப்பார். அவனை காணும் போதெல்லாம் பட்டும் படாமலும் காறித் துப்புவார். அப்போதுதான் சங்குண்ணிக்கும் மோகமான முப்பது நாட்களும், ஆசையான அறுபது நாட்களும் முடிந்துபோன வேளை. இதனாலும், காரணவானின் அவமதிப்பாலும் பாருக்குட்டியிடம் திட்டவட்டமாய் சொல்லிவிட்டான். மேல்முறையீடு இல்லாத தீர்ப்பு.