பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

சமுத்திரக் கதைகள்


தொள்ளைக் காதுகளில் மட்டும் ஆண்களைப் போல் ஈயக் குண்டலங்கள். மற்றபடி திறந்தவெளி மார்புக்காரிகள்... மார்பகங்கள், வயதுக்கேற்ப மாங்கனியாய் பெருத்தும், பாவக்காயாய் சிறுத்தும், சுரைக்கூடாய் சுண்டியும் கிடந்தன.

நேற்றுவரை, இந்த மார்பகங்களை, கை, கால்களைப் போல் வெறுமனே ஒரு உறுப்பாக பார்த்துப் பழகிய இந்தப் பெண்கள், அந்த தெற்குப்பக்க குடிசை வரிசையில் மேற்கோர எல்லையாய் நிற்கும் பனையோலை வீட்டின் முன்னால், அவ்வப்போது வெளிப்பட்ட ரவி க்கைகாரியைப் பார்த்து லேசாய் சிறுமைப்பட்டார்கள். ஓரளவு, பொறாமைப் பட்டார்கள். அவள் ரவிக்கையை மானசீகமாக கழட்டி இடுப்புக்கு மேல் மாட்டிப் பார்த்தார்கள். மேல்சாதி பெண்கள் கூட, இவளை மாதிரி ரவிக்கை போடாமல் மார்பகங்களில் கச்சை கட்டியிருப்பார்கள். சிலசமயம் தோள்சிலையை (மாராப்பு) முதுகுமுழுக்கக இறுகச் சுற்றி, இடுப்பில் இன்னொரு சுற்றாய் சுற்றி சொருகிக் கொள்வார்கள். ஆனால், இவளோ தோள்களின் இருபக்கமும் டக்கு, டக்கான துணிப் பூக்களோடு மார்பகத்திற்கும் கிழே போன அந்த சட்டைக்கு மேலே, வரிவளியாய் சுற்றிய கண்டாங்கி சேலையோடு நிற்கிறாள். கேட்டால், ரவிக்கை என்கிறாள். எங்கள்' ஊர் பழக்கம்' என்கிறாள். 'நீங்களும் போட்டுக்கணும் என்கிறாள். ஒருத்திக்கு தாலியை விட இதுதான் முக்கியம் என்கிறாள். இவளோடு சேருவது எலியும், தவளையும் கூட்டுச் சேர்ந்த கதைதான்...

அந்த தண்டோராவிற்கு முன்பு வரை, அந்த ரவிக்கைக்ார இளம்பெண்ணை சுபதேவதையாய் அதிசயத்துப் பார்த்த பெண்கள் இப்போது கோபம், கோபமாய் பார்த்தார்கள். பயத்தால் ஏற்பட்ட கோபம். 'சரியான சிமிட்டாக்காரி, இவள் இப்படி போட்டு இருக்கிறத ஏமான்க கிட்ட சொல்லாட்டா, நம்மபாடு கிறிச்சானுக்கு மறிச்சானாயிடும். அவள்கிட்ட இப்பவே போயி, மேல்சட்டையை கழட்டி, தோள்சிலையை தூக்கி எறியச் செய்யணும். இல்லாட்டா, நம்ம தலைமுடிக்குள்ள உலக்கைய உட்டு அதுல தல முடிய சுத்தோ சுத்துன்னு சுத்தி, குனிய வச்சி முதுகுல பாறாங்கல்ல ஏத்துவாங்க.