பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகம் தெரியா மனுசி

7


வந்துட்டான். ரெண்டு நாளிக்கு விட்டுப் புடிச்சா சரியாயிடும். என்ன செய்யுறது... ரோஷக்காரியா இருக்கா”

“நம்ம சாதி பொம்பளயளுக்கு ரோஷம் கூடாது. ஆச்சி"

“ஏன் கூடாது? அப்படின்னா சிலையையும் அவுத்து போடுங்கழா”

‘இதபாரு ஆச்சி வயசானவன்னு பாவம் பாக்கோம். இல்லாட்டா கச்சேரிக்குப் போக அதிக நேரம் ஆகாது. வேணுமுன்னா ஒண்ணு செய். மவராசா வரும்போது, மேல்சாதி பொண்ணுங்கள சீவி சிங்காரிச்சு கொப்பு, சரடு, தலைசுத்தி, தண்டை, சதங்கை, வளையல், காப்பு, காசுமாலை, கண்டிமாலை போட்டு மாடத்துல நிறுத்தி, மவராசா பார்வையில படவச்சி... அவரு, அவளுவள கூடாரத்துல அனுபவச்சிட்டு இருபது கோட்ட விதபாட்ட அம்மச்சி கோணமா கொடுக்கிறது மாதிரி, மேல்சாதிக்காரி மாதிரியே தெரியுற ஒன் மருமவள அலங்காரம் பண்ணி, மவராசா வர வழிப்பக்கம் நிறுத்து. இவளையும் துக்கிட்டுப் போவாரு... இருபத்தோருக் கோட்ட விதபாட்டையும் தருவாரு பேசுறா பாரு பேச்சு.”

பூமாரி, பத்ரகாளியானாள். இப்படி அவள் கோவப்பட்டு அந்தப் பெண்கள் பார்த்தது இல்லை.

“நாக்க அறுத்துப்புடுவேன்... என்ன பேச்சுடி பேசுற..? எந்த சாதியையும் ஒன்ன மாதிரி மட்டமா நினையாத. நான் சின்னப்புள்ளையா இருக்கும்போது, இவருக்கு முந்துன மவராசா இந்தப் பக்கம் வந்தாரு ஒரு பொண்ணோட ஆறடி நீள தலமுடிய பாத்துட்டு மயங்கிப் போனாரு சேவகர்கள கூப்பிட்டு அந்தப் பொண்ண கண்டுபிடிக்கச் சொன்னாரு. அவங்களும் கண்டுபுடிச்சு அந்தப் பெண்ணுக்கு பல்லக்கு, நகை, நட்டு கொண்டுவந்து மகராசாகிட்ட வரச் சொன்னாங்க. ஆனால் அந்த மவராசி... அவள் செத்தும் தெய்வமா நிக்க... தங்கரளிக் கொட்டைய அரச்சிக் குடிச்சி தன்னையே கொன்னுகிட்டா. இதுமாதிரிதான் என் மருமவளும்... வந்த வழிய பாத்து போங்கடி. இப்பல்லாம் பல இடத்துல நம்மோட பெண்டுக மேல்சட்டைப் போட்டு லாந்துறாளுவ. இவளும் இப்படி