பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சமுத்திரக் கதைகள்


கயிற கழட்டி மூணுதடவ தலயச்சுத்தி, காறித்துப்பி, அவன் மூஞ்சில எறிஞ்சுட்டு வீட்டுக்கு ஒடியாந்தேன். ஆனா, ஊரும், உலகமும் கள்ளத்தாலியோ, நல்ல தாலியோ, அத கட்டுணவனுக்குத்தான், நான் வாக்கப்படனுமுன்னு சொன்னாவ. அய்யாவும் ஊருக்கு பயந்து சம்மதிச்சுட்டாரு. இதனால, தாம்பரபரணி கரையில ஒரு புளியமரத்துல தூக்குப்போடப் போனேன். அப்போ என்னை தற்செயலாய் பார்த்த இவியளோட மவன், தடுத்தாரு. எங்கப்பக்கத்து பிள்ளவாள் வக்கில் அய்யாவுக்கு குதிரை வண்டி ஒட்டுனவரு. ஏற்கெனவே அவருக்கும் எனக்கும் தொடாத, கெடாத பழக்கம். என் கதைய கேட்டுட்டு.... நெல்லையப்பர் கோயிலுக்கு முன்னால, கழுத்துல தாலிய போட்டு, இங்கு கூட்டிக் கிட்டு வந்துட்டாரு.”

அவள் சொல்வதை ஏனோ தானோவாய் கேட்டுக் கொண்டிருந்த, ஏவளாளிகளின் ஒருவன், தனது ஏமானர்களை உசுப்பி விட்டான்.

“இந்த கிழவி சரியான மஞ்ச கடஞ்சா மகனப் பத்தியோ, மருமவள பத்தியோ மூச்சு வுடல. இவள கச்சேரிக்கு தூக்கிட்டுப் போகனும். அப்பதான் அந்தப் பய வந்து தலவரி கட்டுவான். பனையோலையில, அவன் செத்துட்டான்னு கிழவி பொய்சொல்லி யிருக்கா. அவன நோகடிக்கணும். இவள சாகடிக்கணும். சரி அது அப்புறம் சங்கதி. உன் புருசன எங்கழா”

“வடக்கன்குளம் வரைக்கும் போயிருக்காவ”

வலிய கணக்கப்பிள்ளை பற்களை கடித்தபோது, மணியம் கச்சேரி அவளை மயக்கமாக ரசித்து மானசீகமாகப் பார்த்தார். கட்டான கட்டழகு... பேசமா அடிமையா வச்சுக்கலாம். இப்போதைய சந்தை நிலவரப்படி ஒரு அடிமையோட விலை ஒன்பது ரூபா. பூமாரி கிழவிக்கு மூணு ரூபா கொடுத்தா போதும். அவளுக்கும், வரிபாக்கிய தித்தாப்போல இருக்கும். நமக்கும் ஒரு வப்பாட்டி அடிமை கிடைச்சாப் போல இருக்கும். இதமாக கேட்டார்.

“உன் பேரு என்னழா?”

“ராசம்மா”