பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

சமுத்திரக் கதைகள்


அந்தக் கன்று நின்றது. நிமிர்ந்தது. ஒரு கரிச்சான்குருவி ஒரு காகத்தை நெத்தியடி போல் “இறக்கை அடி” கொடுத்துக் கொண்டிருந்தது. மூங்கில் சிதறல்களும், பன்னாடைகளும் நிறைந்த கூட்டிலிருந்து ஒரு காகத்தை ஒரு ஆண்குயில் வம்புக்கு இழுத்து, ஆகாய வெளியில் போராடப் போவது போலவும், பயந்தது போலவும் பாசாங்காய் பறந்தபோது, அந்த மூடப் பறவை அதை நம்பி அதைத் துரத்தியபோது, பெண்குயில் ஒன்று அதன் கூட்டிற்குள் சென்று முட்டையிட்டது. ஆனாலும்

அந்தக் கன்று, இந்த அருகாமைக் காட்சிகளை பார்க்காமல் தொலைநோக்காய் பார்த்தது. பார்க்கப் பார்க்க அதன் பரபரப்பு பரவசமானது. அதோ அம்மா வருகிறாள். ஒடி வருகிறாள். ம்மா... ம்மா... இங்கே நிக்கேம்மா..

அந்தக் காட்டுக் கன்றுக்குட்டி, அம்மாவை நோக்கிப் பாய்ந்தது. இரண்டும், ஒன்றையொன்று அந்த வினாடியே பார்க்கவேண்டும் என்பதுபோல் துடியாய் துடித்து கால்கள் தரையில் பாவாமல் தாவ, எதிர் எதிராய் சந்தித்தன. புதிர் புதிராய் பார்த்தன. இரண்டுக்கும் ஏமாற்றம். தாய்க்கு அது பிள்ளையில்லை. பிள்ளைக்கு அது தாயில்லை.

அந்தக் காட்டுப் பசு, துக்கி வைத்த முன்கால்களை தரையில் போட்டபடியே மீண்டும் ஓடியது. இந்த இடைவெளியில் அந்தக் கன்றுக்குட்டியும் யோசித்துப் பார்த்தது. அம்மா வருவாளோ மட்டாளோ... இந்த இரவை இந்த “சித்தியோடு” போக்கலாம். நாளைக் காலையில் அம்மாவை தேடலாம். ஒருவேளை இவளே, அம்மா இருக்கும் இடத்தைக் காட்டலாம்.

அந்த இளங்கன்று, மூச்சைப் பிடித்து, தத்தலும் தாவளலுமாய் அந்த பசுவின் பின்னால் ஓடியது. வேகவேகமாய் ஓடி, பிறகு அதற்கு இணைாய் ஓடி, அதன் கழுத்தில் முகம் போடப் போனபோது -

அந்தப் பசுவோ, உடனடியாக நின்றது. இதை எரிச்சலோடு பார்த்தது. ‘உன்னைக் கூட்டிப் போனால் என் குட்டி என்னாவது' சரியான மூதேவி... என் நம்பிக்கையை நாசமாக்கிட்டே...