பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

சமுத்திரக் கதைகள்


கொலையாய் குறைக்கும் நாய்களை சினந்து பார்க்கிறது. அப்புறம் அந்தப் பாறைக் குவியல்களின் எல்லை விளிம்பில் மெல்ல நடந்து ஒரு புதர்ப் பக்கம் போகிறது. சத்தம் கேட்டு நிமிர்கிறது. மேலே புன்னை மரங்களில் அமர்ந்த மயில்கள் அந்தப் பக்கம் போகாதே என்பதுபோல் குரலிடுகின்றன. ' ஒடிப்போ ஓடிப்போ' என்பது போல் சிறகடித்து மாரடிக்கின்றன. பிறகு, சில காட்டுப் பூனைகள் தங்களுக்கே உலை வைக்க மரமேறுவதைப் பார்த்துவிட்டு, ஒரே பாய்ச்சலாய் பறந்து பாறைக் குவியலின் மேல் அமர்ந்து, அந்தக் குட்டியை மீண்டும் எச்சரிக்கின்றன.

அந்தக் கன்றுக்குட்டிக்கும் ஏதோ புரிந்துவிட்டது. அதைக் காட்டுவது போல் மோவாயை முன்னும் பின்னும் ஆட்டியது. ஆனாலும், உயிர்ப் பயம் அற்றுப் போய், தட்டுத் தடுமாறி அந்தப் புதர்ப்பக்கம் போய் விட்டது. குகைச் சுவரான மரக்கிளைகள். பின்னப்பட்டது போன்ற மூங்கில் இடுக்குகள். வேலி போன்ற காட்டுச் செடி. அவற்றின் இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் வரிக்கோடுகள்... அங்குமிங்குமாய் அசையும் கோடுகள். முள்போல் காட்டும் நகங்கள்.

அந்தக் கன்றுக்குட்டி நிர்ப்பயமாய், நிர்க்குணமாய், அந்தப் புலியின் அருகே போய் விழுகிறது. பதுங்காமல், படுத்துக் கிடக்கும் அந்தப் புலியோ அந்தக் குட்டியைப் பார்த்ததும் பார்க்காதது போல் முகத்த்ை திருப்பிக் கொண்டது. ஐந்தாறு நாட்களுக்கு முன்பு உருமிய புலிதான் இது. தன்னை விட பலமடங்கு பெரிய காட்டெருமை கூட்டங்களில் ஊடுருவி அவற்றில் ஒன்றே ஒன்றை நேருக்கு நேராய் சாய்க்கும் பழக்கம் கொண்ட புலிதான்... ஒரு கஜராஜாவைக் கூட சேதப்படுத்திய காட்டுராஜாதான். ஆனாலும், இப்போது அது பசிப்பிணியாலும் பாசப்பிணியாலும் தவித்தது. ஒரு வாரத்திற்கு முன்பு, இந்தப் புலி தனது குட்டியோடு திரிந்தபோது, காட்டு நாய்க்கூட்டம், இதை வளைத்துக் கொண்டன. வட்ட வியூகத்திற்குள் இதை ஒரு மையப் புள்ளியாக்கி, இரண்டு நாள் பட்டினி போட்டன. பிறகு அந்த நாய் வட்டம், வியூகத்தை நெருக்கி நெருக்கி, தளர்ச்சியான இந்தப் புலியை தாக்கப் போனது.