பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

சமுத்திரக் கதைகள்


அந்த நாய்கள் இப்போது எச்சில் சதைக்காக காத்து நின்றன. இரை தின்னும் புலி, தங்களைத் தாக்காது என்ற அனுமானத்துடன் நெருங்கி வந்தன. அந்தப் புலியும் அவற்றைப் பார்த்து விடுகிறது. பெற்று வளர்த்த குட்டியைக் கொன்ற அந்தக் காட்டுநாய் பிரதிநிதிகளை காணக் காண, அதன் கண்கள் கொதித்தன. கன்றுக்குட்டியின் ரத்தம் வேறு அதற்கு ஒருவித சாராய போதையைக் கொடுத்து பாச உணர்வையும், பழி உணர்வையும், கொலை உணர்வாய் ஆக்கியது. ஏற்கனவே அந்த நாய்களின் வயிறுகளை, தனதுச் செல்லக் குட்டியின் சுடுகாடாய் பார்த்த அந்த தாய்ப்புலிக்கு கூடுதல் ஆவேசம்...

அவ்வளவுதான்.

அந்தப் புலி, ஒரே தாவாய் தாவி ஒரு நாயின் வயிற்றைக் கால்களால் கிழிக்கிறது. இன்னொன்றை வாயால் கவ்வி கழுத்தைத் துண்டிக்கிறது. பின்னர், அந்த மாமிசப் பிண்டங்களின் மீது ஏறி நிற்கிறது. தக்காரும், மிக்காரும் இல்லாதது போலவும், தானே தானாய், தான் ஒரு தானாய், அந்தக் காட்டையே ஆளுவது போல கர்வப்படுகிறது.

அந்தக் கர்வத்தைக் காட்டுவதுபோல், உருமிக் காட்டுகிறது. ஆனாலும் அந்த உருமல் சத்தம் அதன் வயிற்றுக்குள் பூஜ்ஜியமாய் போன அந்தக் கன்றுக்குட்டி சிரிப்பது போல் ஒலிக்கிறது.

இந்தியா டுடே
இலக்கிய ஆண்டு மலர் 1995