பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீரு பூத்த நெருப்பு

31


வீடு என்கிறதுனால, இப்படி உரிமையோடு எசகு பிசகாய் உட்காருறேன். பிறத்தியார் வீட்டுல, அது பிராமணாள் வீடா இருந்தாலும், ஆசாரமாத்தான் உட்காருவேன். ஏன் நிக்கிறேள்? நீங்க பாட்டுக்கு சோபாவுல உட்காருங்கோ. மரியாதையும் அன்பும் மனசுலதான் இருக்கணும். இந்த ஏழைப் பிராமணன் மேல, அந்த ரெண்டும் உங்ககிட்ட இருக்குன்னு நேக்குத் தெரியும்”

உச்சி குளிர்ந்த ஆண்டவன், சாஸ்திரி சாருக்கு முன்னால் தரையிலேயே உட்கார்ந்தார். இதற்கு மரியாதை மட்டும் காரணமில்லை. அந்த வேணலில், சோபா இருக்கையின் இலவம் பஞ்சு சூட்டைவிட, அந்தப் பளிங்குத்தரை கிளுகிளுப்பாக இருக்கும் என்பது அவருக்கு தெரியும். இந்தச் சமயத்தில், அந்தம்மா ஒரு வெள்ளி டம்ளரில் மோர் கொண்டு வந்தாள். அதை, சாஸ்திரி கைநீட்டி, வாங்கப் போனபோது, அதைக் கொடுக்க மறந்தவளாய், கணவனைப் பார்த்து செல்லக் கத்தினாள்.

“ஏங்க! உங்களுக்கு 'சென்ஸ் ஆப் டிசிபிலின்' இருக்குதா? பாருங்க சாமி... அரைமணி நேரத்துக்கு முன்னால 'டயனால்' போட்டுட்டு, இந்நேரம் கேப்பைக்கூழ் குடிச்சிருக்கணும். நீரழிவு நோய் இருக்கிறதே இவருக்கு மறந்து போகுது. சாமீ”

“இந்தம்மா மட்டும் என்னவாம்...' பிளட் பிரஷருக்கு' இந்நேரம் மாத்திரை சாப்பிட்டிருக்கணும். என்னை கவனிக்கிறதுலயயே, தன்னை கவனிக்க மாட்டக்காள்... காந்தாரி கண்ணை கட்டிக்கிட்டது மாதிரி, நான் மருந்து சாப்பிட்டால்தான், இந்தம்மா சாப்பிடுவாளாம். ஆபீஸுக்குப் போன்போட்டு, என்னோட உதவியாளர்கிட்ட, நான், சாப்பிட்டேனான்னு கன்பார்ம் செய்த பிறகுதான், இந்தம்மா சாப்பிடுவாங்க.”

“இவர் மட்டும் என்னவாம் சாமி... காபி கொண்டு வந்து, முகத்துக்கு 'ஆவி' பிடிக்கிறது மாதிரி, எதிரே நீட்டிக்கிட்டே என்னை எழுப்புவார்.”

அறுபத்தைந்தைத் தாண்டிய சாஸ்திரி, ஐம்பதைத் தாண்டாத அந்தத் தம்பதியரை நோக்கி, ஆசிர்வாதப் பார்வையில் பேசினார்.