பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

சமுத்திரக் கதைகள்


“ஆனா, ஒங்க கையில நிறைய இருக்குதே.”

“அதை ஏன் கேட்கிறீங்க சாஸ்திரி ஸார்? இந்தக் கல்யாணப் புரோக்கருங்க, அடிக்கிற கூத்திருக்கே... பெருங்கூத்து... இவங்க ஆபீஸ்ல, ஆயிரம் ரூபாய் கட்டணும். அவங்களே விளம்பரம் போடுவாங்க. அவங்ககிட்ட விளம்பரத்தை நம்பி வருகிற, இருபது பேர்கிட்ட, தலைக்கு ஆயிரம் ஆயிரமாய் கரந்துடுவாங்க. லாரி புரோக்கரை நம்பலாம்... வீட்டு புரோக்கரை நம்பலாம்... ஆனால், இந்த கல்யாண புரோக்கர்களை மட்டும் நம்பக்கூடாது. கல்யாணம் நடத்துறது நாம். இவங்க இடையில புகுந்து, வரதட்சணைக்கு மேல பணம் அடிக்கிறாங்க. விளம்பரத்துல ஜாதகம் குறையா வந்ததுனால, நாங்களும் ஒரு புரோக்கர்கிட்ட ஆயிரம் ரூபாய் அழுது, எங்களுக்கு தேவையான ரெண்டு ஜாதகத்தை எடுத்து வந்தோம்.”

“அவங்களும் பிழைக்க வேண்டாமோ? நான்தான் அசடு. ஆனால், அந்த அசட்டுத் தனத்திலயும் ஒரு சுகம். சரி... ஜாதகத்தை நீட்டுங்கோ. வீட்டுக்குள்ள கொண்டுபோன மோர் டம்ளரையும் எடுத்தாங்கோ.”

“அய்யய்யோ... நானும் அசடு சாமி. கொண்டு வந்ததை கொண்டு போயிட்டேன் பாருங்க. ஏங்க... உங்களைத்தான், சாப்பிட்ட பிறகு, மாத்திரைங்கள போட்டுக்கணுமே. ஏன் போடல?”

“நீதானே எனக்குத் தருவே.”

“இவர் சரியானக் குழந்தை. ஒரே ஒரு நிமிடம் பொறுங்க சாமி...”

சாஸ்திரி, பல்லைக் கடித்தபோது, நிதானமாய் உள்ளறைக்குள் நடந்து, ஒரு பாலித்தின் பையை உப்பவைத்த மாத்திரைகளை கணவரிடம் நீட்டிவிட்டு, அதே நடைவேகத்தில், சமையலறைக்குப்போய், வெண்ணெய்யாய் திரண்ட மோர் டம்ளரை, சாஸ்திரியிடம் நீட்டினாள். சாஸ்திரியும், அந்த மோரை பார்க்காமலேயே குடித்துவிட்டு, உதட்டில் ஒட்டிய வெண்ணைய் திரட்சியை, துடைத்தபடியே, “சரி. பார்ப்போமா...” என்றார்.