பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதிர் கன்னி

“எழுந்திருங்க அப்பா...”

இனிப்பு வகைகளை உள்ளடக்கிய பொன் நிற அட்டைப் பேழையை, அருகேயுள்ள தொலைக்காட்சிப் பெட்டிமேல் வைத்துவிட்டு, கிதா, ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த தந்தை அருணாசலத்தை, அதட்டல் பாவலாவில் கூவி, கையை பிடித்திழுத்தாள். வாசிப்பைக் கலைக்கும் எவரையும் கடுகடுப்பாய் பார்ப்பவர் அப்பாக்காரர். இப்போது, அந்தக் கலைப்பை ஏற்படுத்தியவள், அந்த வாசிப்பைவிடச் சுவையான மகள் என்பதால், முகத்தைச் சுருக்க வைத்து, உதடுகளை துடிக்க விட்ட அந்தக் கடுகடுப்பு, வாய் கொள்ளாச் சிரிப்பாய், மாறியது. அந்தச் சமயம் பார்த்து, கிதாவின் அம்மா பூரணி, யதேச்சையாக உள்ளறையில் இருந்து வெளிப்பட்டாள். கீதா, அம்மாவையும் கையைப் பிடித்திழுத்து, அப்பாவிற்கு இணையாக நிற்க வைத்துவிட்டு -

அவர்கள் முன்னால், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, நான்கு பாதங்களையும், இரண்டு கரங்களால் தொட்டபடியே, “என்னை ஆசிர்வதியுங்கள்” என்றாள்.

அருணாசலம், கிதாவை குழந்தைபோல் தூக்கி, சிறுமிபோல் வளைத்து, இளம்பெண்ணாய் நிறுத்தினார். அலுவலகத்தில் நடக்கும் சின்னச்சின்ன பாராட்டுதல்களை, பெற்றவர்கள் இருவரையும், மாறி மாறிப் பார்த்தபடி, ஒப்பிக்கும் மகள், ஏதோ நல்ல செய்தி சொல்லப் போகிறாள் என்ற பூரிப்பில் பூரித்துப் போனார். மகளின் முகம் வழியாய் கண்களை ஊடுருவவிட்டு, கடந்து வந்த காலத்தை, நிகழ்காலத்தில் நிறுத்தி அசைபோட்டார்.

இவள் முப்பாட்டி காதுகள் இரண்டும், ஊஞ்சல் சதைக்கோடுகளாகி, அதில பாம்படங்கள் தொங்கி, அவள் நடைக்கேற்ப ஆடிக் குலுங்க, கணவனோடு கழனிகளிலும்,