பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

சமுத்திரக் கதைகள்


‘அடுத்த சாதிக்காரன், எவனையும் காதலித்து, அந்தச் செய்தியை சொல்லப்போகிறாளா... பதிவுக் கல்யாணம் செய்துவிட்டு, மாப்பிள்ளைப் பயலை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு, இங்கே ஆழம் பார்ப்பதற்காக, இப்படி காலில் விழுகிறாளோ... எந்தப் சாதிக்காரப் பயலாய் இருப்பான்? இவளோடு காரில் வந்து, வீட்டில் நொறுக்குத் திணி சாப்பிட்டுவிட்டுப் போகிறானே தேவர் பையன் நரேந்திரன்... அவனா? அல்லது இவளோடு சேர்ந்து லண்டனுக்கு போனானே வன்னியப் பையன் சேகரன்... அவனா? அல்லது டை கட்டிக்கொண்டு வருவானே அய்யரோ அய்யங்காரோ... பாலாஜி... அந்தப் பயலா? ஒருவேளை, இளம் வயதிலேயே எடுத்த எடுப்பிலேயே ஆராய்ச்சி டைரக்டராய் இருக்கானே அரிஜனப் பையன் மனோகரன். அவனா இருக்குமோ? முருகா... விநாயகா... ஆஞ்சனேயா... கிருஷ்ணா... இவன்களுல எவனாவும் இருக்கப்படாது. சொந்தச் சாதியை சேர்ந்தவனாய் இருக்கணும். அப்படியே இல்லாட்டியும், இவன்களுல அந்த அரிஜனப் பையனா மட்டும் இருக்கப்படாது.’

அம்மாக்காரி படபடப்பாய், மகளைப் பார்த்துவிட்டு, வெளியே எட்டிப் பார்த்தாள். எவனும் காம்பவுண்டு கேட்டுப் பக்கம் பதுங்கி நிற்பதுபோல் தெரியவில்லை. ஒருவேளை, நட்சத்திர ஹோட்டலுல எதுலயும் ரூம் போட்டு, தங்கியிருப்பாங்களோ? வீட்ல ஒப்புக்கு சொல்லிட்டு, அந்த ஹோட்டலுக்கு திரும்பப் போறாளோ? இந்த துக்கச் சேதியைத்தான், நல்ல சேதியா சொல்லப் போறாளோ...’

கிதாவும், தன்னை அறியாமலே, அம்மாவின் வயிற்றெரிச்சல், வாயெறிச்சல் ஆகும்படி பீடிகையோடு பேசினாள்.

“எங்க கம்பெனி டைரக்டர் மனோகரன் இருக்காரே, அவர் இன்றைக்கு ஒரு நல்ல செய்தி சொன்னார். என் உள்ளுணர்வு எதிர்பார்த்த செய்திதான்.”

அருணாசலம், அமைதியான ஆவலுடன் மகளைப் பார்த்தபோது, பூரணி, துள்ளிக் குதிக்காத குறையாக, “என்னடி சொன்னான்... என்னடி சொன்னான்...” என்று மாறி மாறிச் கேட்டாள். அவன், இவளை காதலிப்பதாகச் சொல்லி, இவள் அதை ஏற்றுக் கொண்டிருப்பாள் என்ற அனுமானம்.