பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IV

அவை வாழ்வின் வித்துக்களாய் எழும் என்ற வரலாற்று உண்மையை அழுத்தமாக முன்வைக்கிறது ராசம்மாவின் கதை.

ராசம்மா, பூமாரி போன்ற வீர மகளிர் வாழ்ந்த கிராமத்துப் பெயரில்லை. ஏனென்றால், அது திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்த “குடிசைமண்டி” மட்டுமல்ல, இன்றைக்குக்கூட தமிழகத்தின் விளிம்புகளில் அடையாளமற்றுக் கிடக்கும் எந்தக் கிராமமாகவும் அது இருக்கலாம்.

அடையாளமற்ற அனைத்துலக ஆண்சந்தைகளில் நடக்கும் அழகிப் போட்டிகளில் தங்களை அவிழ்த்துக்கொள்ளும் இந்தத் தலைமுறையில் ராசம்மாக்களும் ஏராளமாக இருக்கிறார்கள். உதிரிகளாகச் சிதறிக் கிடக்கும் இவர்கள் ஒருங்கிணைந்து எழுப்பும் கூட்டுக்குரலில்தான் சந்தைகளின் கூச்சல்கள் கரையேறும் - முகமுள்ள மனுவழிகளாய் - மனிதர்களாய்.

பொருள்மிக்க பூஜ்யம் உருவகமாய்ப் பேசுகிறது. இது ஒரு காட்டு மாட்டுக் கன்று பூஜ்யமாய்ப் போவதைப் பற்றிய கதை. காட்டுநாய்களின் வெறியாட்டத்துக்குத் தன் தாய் பலியாவதைப் பார்க்கின்றது கன்று. அந்நாய்களைத் தற்போதைக்குத் தன்னால் எதிர்த்துத் தாக்க முடியாது என்பதைக் கன்று உணர்கிறது. அவற்றிடமிருந்து தப்பியோடுவதே ஒரே வழி. தப்பி வெகுதூரம் செல்ல முடியாதபடி, சுற்றி வளைத்திருக்கும் நாய்கள். அங்குச் சோர்ந்து கிடக்கும் புலிக்கு வலியச்சென்று தன்னை இரையாக்கிக் கொள்ள முடிவுசெய்கிறது. அந்தப் புலியின் கதையும், சோகமானதுதான். தன் குட்டியை அந்த நாய்களிடம் பறிகொடுத்த புலி அது. துக்கத்தின் அழுத்தத்தில் துவண்டு கிடந்த புலி, வலிய வந்து உணவான கன்றைத் தின்றபின் தெளிச்சி பெறுகிறது, எழுச்சி கொள்கிறது, சினந்து தாக்குகிறது. தன் குட்டியைச் சூறையாடிய நாய்களைப் பழிதீர்த்துக் கொள்கிறது. அதன் வழியாக அந்தக் காட்டு மாட்டுக் கன்றும் தன் இறப்புக்குப் பொருள்தேடிக் கொள்கிறது. இது கதை.