பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதிர் கன்னி

47


ஒலிக்குது... இப்படி பேசுவீங்கன்னு தெரிந்தால், எம்.எஸ்.சி. பயோ டெக்னாலஜி முடிச்சுட்டு, உயிரியலில் டாக்டர் பட்டமும் வாங்கியிருக்க மாட்டேன்... இப்படிப்பட்ட சம்பளத்தையும், சகல வசதிகளையும் தருகிற இந்த கம்பெனியில சேர்ந்திருக்கவே மாட்டேன். என்னப்பா நீங்க... பெத்த கடன்னு ஒண்ணு உண்டுன்னா, பிறந்த கடன்னு ஒண்ணு கிடையாதா? உங்க மகளைப் போய் பிச்சை போடுறதாய்...”

கிதா, அழுகையை மறைப்பதற்காக, அப்பாவிற்கு முதுகு காட்டியபோது, அம்மா, அவளை, தன்மீது சரித்துக் கொண்டாள். தந்தையும் கிதாவின் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே, தனது முன்னுரையையே முத்தாய்ப்பாய் முடித்தார்.

“நீ, இன்னொரு பிச்சையும், எங்களுக்கு போடணும் என்கிறதுக்குத்தான் அப்படிச் சொன்னேன் கிதா...”

கிதா, அம்மாவை கிழே விழ வைக்காத குறையாய், சட்டென நிமிர்ந்து, தந்தையை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். அவரோ, அவள் அப்படிப் பார்க்கப் பார்க்க, கண்களைத் தாழ்த்தித் தாழ்த்திப் பேசினார்.

“அடுத்தடுத்துப் பிறந்த குழந்தைகள், அதே மாதிரியே செத்தபோது அல்லது கார்ப்பரேஷன் கவனிக்காத சுற்றுப்புறச் சூழலில் கொலை செய்யப்பட்டபோது, கோவில் குளம்போய் தவமிருந்து பெற்றது மாதிரி பிறந்த மகள் நீ. ஒரே மகள். எனக்கோ, இவளுக்கோ, இந்த பங்களா பெரிசில்ல... இந்த காரும் முக்கியமில்ல. நீ ஐவரில் ஒருவராய் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முக்கியமில்ல.”

அருணாசலம், மேற்கொண்டு பேசமுடியாமல் திண்டாடியபோது, கிதா, அடி எடுத்துக் கொடுத்தாள்.

“அப்போ உங்களுக்கு எதுதான் முக்கியம்? சொல்லுங்கப்பா... கொஞ்சம் நேரத்துக்கு முன்னே, நல்ல செய்தியை உடனடியாய் சொல்லணுமுன்னு நீங்கதானே சொன்னிங்க... உங்களவில் எது நல்ல செய்தியோ அதைச் சொல்லுங்க?"