பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

சமுத்திரக் கதைகள்


“நீ எதுவும் குறுக்கேகப் பேசாதே பூரணி. கிதா! அம்மா சொன்னதுமாதிரி, நீ இங்கேயே கல்யாணம் செய்து எங்களை தாத்தா பாட்டியாக்கணும். இதுதாம்மா எங்களுக்கு பெரிசு... இதுதாம்மா நான் ஒங்கிட்ட கேட்கிற பிச்சை...”

கிதாவுக்கு, அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. “தந்தையும் தாயும் ஈன்ற பொழுதிலும் பெரிதும் உவக்கும் பெற்றோர்களாய்', மகிழ்ச்சியில் திக்கு முக்காடி திணறிப் போவார்கள் என்ற எதிர்பார்ப்பு, ஒரு உருவமாகி, எதிர்முனையில் தனியாய் நின்று, அவளைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதுபோல். தோன்றியது. அவளுள் இருந்த ஒரு விஞ்ஞானப்பெண், கண் முன்னால், பேயாய், பிசாசாய், பிள்ளைக் குட்டி பெற்ற எலும்புக் கூடாய் உருவம் காட்டியது. முதல் தடவையாக பெற்றோரிடமிருந்து அந்நியப்பட்டது போலவும் ஒரு உணர்வு ஏற்பட்டது. அப்படி ஏற்பட ஏற்பட, ஆத்திரமும் அழுகையும் மாறி மாறியும், ஒரே சமயத்திலும், வரத் துவங்கின.

சிறிது நேரம் வாசல் பக்கம் நடந்தாள். தேக்கு மரக்கதவின் குமிழ்களைப் பிடித்தபடியே, அசைவற்று நின்றாள். ஆராய்ச்சியில், குறிப்பாக மார்க்ஸும், ஏங்கெல்ஸும், திஸிஸ் - ஆன்டி திஸிஸ்... அதாவது வாதம், எதிர்வாதம் என்கிற முறையில், எதிரும் புதிருமாய் வாதித்தார்களே அப்படி, தன் தரப்பிலும், பெற்றோர்கள் தரப்பிலும் திருமண விவகாரத்தை அலசிப் பார்த்தாள். இதனால், ஆத்திரம் அடங்கவில்லை என்றாலும், அது அழுகையை நிறுத்தியது. அதேசமயம், அசைக்க முடியாத ஒரு உறுதியைக் கொடுத்தது. ஆரம்பத்தில் அணையப் போவதுபோல் தோன்றும் திக்குச்சி நெருப்பை, குவிந்து பிடித்தால் சுடர் விடுவதுபோல், அவள் ஆசாபாசங்கள் கொண்ட மகளாகவும், அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு விஞ்ஞானியாகவும் மாறி மாறிப் பேசினாள். முதல் கட்டமாக, ஒரு கேள்வி கேட்டாள்.

“நீங்க எடுத்துக்கிட்ட கல்யாண முயற்சிக்கு நான் எப்போதாவது தடையாய் இருந்திருக்கேனா அப்பா? உங்களால் முடியாவிட்டால், நான் என்னப்பா செய்ய முடியும்?"