பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதிர் கன்னி

49


சின்னச் சின்ன மாணவர்களிடம், பிரம்பும் கையுமாய் கேள்வி கேட்டே பழகிய தந்தையின், தலையும் இப்போது தாழ்ந்தது. ஆனால், பூரணி, அவர் தலைக்குமேல், தனது தலையை தூக்கியபடியே, புலம்பினாள். மகளுக்கு தெரிந்த சங்கதிதான்.

“உன் படிப்பே உனக்கு எதிரியாய் போயிட்டுதேடி... ஒரு பொண்ணு படிக்காட்டாலும் தப்பு... படித்தாலும் தப்பு... என்கிற மாதிரி ஆகிப்போன காலமாச்சே, நாங்களும், எத்தனை பத்திரிகை உண்டோ, அத்தனை பத்திரிகையிலும், விஞ்ஞானியாய் இருப்பவள், நாற்பதாயிரம் ரூபாய் சம்பளத்தோடு சகல வசதியோடயும் வாழ்கிறவள்... வயது இருபத்தெட்டுன்னு கொடுத்துத்தான் பார்த்தோம். வயசைப் பார்த்த உடனே, வயசைப் போட்டா வரமாட்டாங்கன்னு ஒரு பத்திரிகை விளம்பர மேனேஜர் சொன்னது சரியாப் போச்சே. இந்தக் காலத்துல _ இந்தக் காலத்துல என்ன இந்தக் காலத்துல... எந்தக் காலத்திலயும், பெண்டாட்டி என்கிறவள், தன் படிப்புக்கும், சம்பளத்துக்கும் கிழே இருக்கிறவளாகத்தான் இருக்கணுமுன்னு, எல்லா ஆண்களும் நினைக்கிறாங்க... நீ ஒரு பி.எஸ்ஸி., பையனைக்கூட கட்டிக்கத் தயாருன்னு சொன்னது எங்களுக்கு புரியுதும்மா. ஆனால், அது அந்தப் பயல்களுக்குப் புரியலி யே... நாங்க என்னதாம்மா செய்வோம்? வார பயல்களே கொஞ்சம். அப்படி வாராவனும்...”

அம்மாக்காரி, தடுமாறினாள். அவளைப் பெற்றபோது ஏற்பட்ட பிரசவ வலியைவிட, இப்போது அவள் வாயும் வயிறும் அதிகமாய் வலித்தது. கையறு நிலையில், கைகளை விரித்தாள். அவளால் பேசமுடியவில்லை. கிதா தனக்கும், அம்மாவுக்கும் சேர்த்துப் பேசினாள்.

“ஏம்மா... வார்த்தைய விழுங்குறே... நான் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறதைப் பார்த்துட்டு, முப்பதாயிரம் ரூபாய் பயல் ஒடுறான்... நான் அஞ்சரை அடி இருக்கிறதைப் பார்த்துட்டு, அதுல ஒரு அங்குலம் குறைஞ்ச பய உதாசினப்படுத்தினான். என்னோடத் தகுதிகளை கவனமாய்க் கேட்ட, ஒரு எம்.எஸ்ஸி., பயலும், அவன் அப்பனும், நான், அடிக்கடி சர்வதேச மகாநாடுகளுல கலந்து கொள்வதற்கு லண்டன், நியூயார்க்,