பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதிர் கன்னி

51


“நீ அப்படி செய்யுறதுக்கு, என்னால ஆதரவு கொடுக்க முடியாட்டாலும், ஆட்சேபிக்க மாட்டேம்மா. ஆனால், அத்தனை நேர்த்திக் கடன்களையும், நான் லண்டனிலிருந்து, ஒரு நல்ல விஞ்ஞானியாய், நம்ம நாட்டுக்கு பேர் வாங்கிக் கொடுக்கிற பெண்ணாய் வரணுமுன்னு, உன் நேர்த்திக் கடன் நோக்கத்த மாத்திக்கோ... எனக்கு சர்ப்ப தோஷத்தைப் பற்றி கவலை இல்லை. அது, ஊர்கிற பிராணியாய் மாறுகிறதுக்கு அதன் முட்டையில எந்த குரோமோசோம் காரணமுன்னு கண்டுபிடிக்கிறதுதான் எனக்கு முக்கியம்.”

“பார்த்திங்களா... ஒங்க மகள் பேசுற பேச்சை. கல்யாணம் கட்டிக்க மாட்டாளாம்.”

“கட்டிக்க மாட்டேன்னு, நான் எப்பவும் சொல்லல. சாதி தடையில்லைன்னு விளம்பரத்துல சேர்க்கச் சொன்னேன். உங்களால, அந்த வட்டத்தை தாண்ட முடியல. இப்போ டு.லேட். நான், இப்போதைக்கு மணமேடையில உட்காரப் போற பெண்ணாய் இருக்கப்போறதில்லை. லண்டனில், சோதனைக் கூடத்துல, ஒரு விஞ்ஞானியாய் நிற்கப்போகிற பெண். காலம் கடந்துட்டு. இனிமேல், கல்யாணம் பேச்சை எடுக்காதிங்க... ஒரு வகையில என்னைப் பார்த்து அரண்டு மிரண்ட பயல்களுக்கு நான் நன்றி சொல்லணும். ஏன்னா... அவங்களுடைய உதாசீனத்துலதான், எனக்கு ஒரு உறுதி ஏற்பட்டது. நீங்க, தாத்தா பாட்டி கனவை விட்டுட்டு, புகழ் பெறப்போகிற... புகழ் கிடக்கட்டும் புகழ்... அது இந்த காலத்துல ஒரு தாதாவுக்கு கூட இருக்குது... மனித குலத்தை கொல்லாமல் கொல்லும் நீரழிவு நோய்க்கு ஒருவேளை எய்ட்சுக்கும் நிரந்தரமான மருந்து கண்டு பிடிக்கப்போகிற மகளோட பெற்றோருன்னு பெருமைப்படுங்க. இதுக்காக வேணுமுன்னா நேர்த்திக் கடன் செய்யுங்க. நான் சொல்றது சரிதானே அப்பா?”

அருணாசலத்தின் தலை, மெள்ள மெள்ள நிமிர்ந்தது. கலங்கிய கண்கள், வறண்டன. துடித்த புருவங்கள், நிலை கொண்டன. உதடுகளை கடித்த பற்கள், உள்ளே போயின.

ச. 5.