பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சமுத்திரக் கதைகள்


அவளைப் பொருள்பட பார்த்தார். பிறகு, அவரது கரங்களில் ஒன்று, மகளின் வலது தோளில் தொங்கியது. இடது கரம், அவள் தலையை கோதிவிட்டது. உடனே, சிறிது விலகி நின்று, மகளையே பார்த்தார். பள்ளியிலும், கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும், காகிதச் சான்றிதழ்களையும், வெள்ளி மெடலையும், தங்க மெடலையும் பெற்றவள். பல்கலைக்கழக நேர்காணலிலேயே, பிரபல கம்பெனிக்கு, விஞ்ஞான ஆராய்ச்சியாளராய் தேர்ந்தெடுக்கப்பட்டவள். அவள் சொல்வதும், அவள் வகையில் சரிதான். ஆனாலும்

அப்பா தயங்கிப் பார்த்தபோது, கிதா தயங்காமல் சொன்னாள்.

“எனக்கும், உங்களை சந்தோஷப் படுத்துறதுக்கும், தாய்மை அடைவதற்கும் ஆசைதான். ஆனால், அதுக்கு என் ஆராய்ச்சியை விலையாய் கொடுக்க முடியாது. அத்தனை வறுமையிலும் பிளஸ் டுவிலேயே நிறுத்தாமல், எம்.எஸ்ஸி., படிக்க வைத்து, வேலைக்கு போன்னு ஒரு வார்த்தைகூட சொல்லாமல், ஆராய்ச்சியும் செய்ய வைத்த ஒரு வித்தியாசமான பெற்றோரின் வித்தியாசமான மகள் நான். அந்தக் காலத்துல, கோபியர்கள், கண்ணனை தங்களுடைய மானசீக அகக் கணவனாகவும், கை பிடித்தவனை புறக் கணவனாகவும் நினைப்பார்களாம். இந்தக் காலத்தில்கூட, தன்னல மறுப்பு கிறிஸ்தவக் கன்னிமார்கள், லேசான ஆசா பாசங்கள் குறுக்கிடும்போது, தங்களை ஏசு ஒருவருக்கே வாழ்க்கை பட்டதாக நினைப்பார்களாம். இதுபோல, என்னோட அகக் கணவன், விஞ்ஞான ரீதியான உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிதான். நான், ஒருத்தனுக்கு பயன்படுவதைவிட, நான் படித்த உயிரியல் பொறியியல் ஆராய்ச்சி... இந்த உலகத்துக்கே பயன்படனும் என்று நினைக்கிறவள். புறக்கணவன் கிடைத்தால் கிடைக்கட்டும்... கிடைக்காவிட்டால் போகட்டும். அப்பா! நான் சொல்றது சரியா?”

தந்தை, புன்னகைக்கப் போனபோது, அவர் ஏடாகோடமாய் மகளுக்கு பச்சைக்கொடி காட்டிவிடுவார் என்று பயந்ததுபோல், அம்மாக்காரி தலையிட்டாள்.