பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

V

சில மனிதர்களை, சில வர்க்கங்களின் பிரதிநிதிகளை உருவகப்படுத்தியுள்ள இக் கதை, பன்முக வாசிப்புக்கு வழிவகுக்கிறது. தாயான காட்டு மாடு, அதன் கன்று, எண்ணிக்கையில் பலவான காட்டு நாய்கள், தாயான புலி, அதன் குட்டி என ஐந்து கதை மாந்தர்களுடன் கதைசொல்பவரும் இரண்டு தலைமுறைகள். தாயை இழந்த கன்று, வாரிசான குட்டியை இழந்த புலி என இருவேறு இழப்புக்கள். தாயும் கன்றும் (இரண்டு தலைமுறைகள்) விழுங்கப்படுகின்றன. ஆனால் புலி தன்னை மீட்டுக்கொள்கிறது. இழப்புகளுக்குக் காரணமான நாய்கள் அழிக்கப்படுகின்றன. யாருடைய பார்வையில் கதையை வாசிப்பது? எந்த இருப்பியல் சூழலுடன் இக்கதை நிகழ்வுகளைப் பொருத்திப் பார்ப்பது?. கேள்விகள் மூலமாகத் தொடர் விவாதத்துக்கு வழிவகுக்கும் கதை. பன்முக வாசிப்புக்குரிய இத்தகைய படைப்புக்களால்தான் சிந்திக்கும் வாசகரை உருவாக்க முடியும்.

நீருபூத்த நெருப்பு மிகச் சாவகாசமாக நகர்ந்து, ஒரு பெரும் பாய்ச்சலுடன் முடிகிறது. முன்றாவது நபர் கண்களுக்கு எடுத்துக்காட்டான தம்பதியர். ஆண்டவன் - அகிலா. மிகப் பொருத்தமான பெயர்கள். ஆள்வதால் ஆண்டவன்; (அவனுக்கு) அனைத்துமாகி, அனைத்தையும் தாங்குவதால் அகிலா. கணவன் தேவையறிந்து நடந்துகொள்ளும் மனைவி. மனைவியின் சேவையைப் புரிந்துகொள்ளும் கணவன். ஆனால் புறத்தோற்றம் அகத்தின் வெளிப்பாடாய் இருக்கவேண்டிய அவசியமில்லை.

“ஆண்டவன் சாருக்கு இருக்கிற ஜாதகம் மாதிரியே அவரோட பையனுக்கு இருக்கு அகிலாம்மாவுக்கு இருக்கிற ஜாதகம் மாதிரியே இந்தப் பெண்ணுக்கு இருக்கு. உங்க ரெண்டு பேரையும் போலவே, இவாள் ரெண்டு பேரும் பிரமாதமாய் வாழ்வாள். ஒங்களோட மறு பதிப்புத்தான் இவாள். உடனே முடிச்சிடுங்கோ.” என்கிறார் சாஸ்திரி. ஆனாலும் ஆண்டவனை நேருக்கு நேராய்ப் பார்த்து, திட்டவட்டமாக, தீர்ப்பளிப்பதுபோல் அகிலா சொல்கிறார்: “இது பொருத்தமில்லாத ஜாதகம். விட்டுத் தள்ளுவோம்."