பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

சமுத்திரக் கதைகள்


கையில் ஒரு கடிகாரம் கூட இல்லாமல், சூரியப் பிரகாசமான முகங்கொண்ட இளங்கோவையும், வாயில் புடவையுடன், அடக்கமே கம்பீரமாக தோன்றிய லூர்துமேரியையும், அப்போதுதான் பார்ப்பதுபோல் பார்த்தார்கள். ஒவ்வொரு தடவைக்கும், ஒரு புதுப் பொலிவைக் கொடுக்கும் நாற்பது வயதுக்காரர்கள்.

எதிர்ப்பக்கம் ஒரு சுழல் விளக்கு கார் வருவதைப் பார்த்ததும், இளங்கோவும் மேரியும், தோள் மேல் தோளுரச, இணைந்து முன்னோக்கி நடந்தார்கள். அந்தச் சமயம் பார்த்து வாசல் கூட்டத்தில் கசாமுசா... என்ன காரணத்தாலோ காப்பக மேலாளர் தனசேகரன், கூட்டத்தை உள்ளே போகவிடாமல் தடுத்தான். உடனே ஒரு சண்டியர், கூட்டத்தின் தாற்காலிக தலைவராகி கத்தினார்.

‘நாங்க போகக் கூடாதுன்னா... இன்னார் இன்னார்தான் வரணுமுன்னு, போஸ்டர்ல போட்டிருக்கலாமே... எதுக்காக அனைவரும் வருகன்னு போஸ்ட்டர்லயும், வரவேற்பு வளைவுகளிலும் போட்டிங்கப்பா...’

‘ஒரு தடவையா வருகன்னு போட்டாங்க? ரெண்டு தடவைல்லா போட்டாங்க...’

அவ்வளவுதான். ஆளுக்காள் பேச்சு. அது முற்றி ஏச்சு. கை்கு கை வீச்சு. குரல்... கூக்குரல்.

சுழல் விளக்கு காரை நோக்கிச் சென்ற இளங்கோவும் மேரியும், காரிலிருந்து இறங்கிய ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி கூப்பிய கைக்கு, பதில் வணக்கம் போடாமலே, அவசர அவசரமாய் வாசல் பக்கம் ஒடி வந்தார்கள். எஸ்.பி.யின் கண்ணசைவு கட்டளையை தன்ல மேல் சூடியது போல், வாசல் பக்கம், லத்தி வீச்சுக்களோடு ஒடி வந்த போலீஸ்காரர்களை காப்பகத் தம்பதி, கையாட்டி, முகமாட்டி, அவர்களை பாதி வழியிலேயே நிற்க வைத்தார்கள்.

கூட்டத்தினர் இளங்கோமேரி சோடியை பார்த்தது பெட்டிப் பாம்பானார்கள். ஒவ்வொருவரும், ஏதோ ஒரு வகையில் இந்த காப்பகத்தின் உதவியை பெற்றவர்கள். என்றாலும் உதவி பெறாத, ஒரு வெளியூர் விருந்தாளி மட்டும், சிறிது காட்டமாகக் கேட்டார்.