பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூலம்

61


மாண்புமிகு அமைச்சர், கட்சி பிரமுகர்கள், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர், சமூகநல அதிகாரி ஆகியோர் சகிதமாக மேடை ஏறினார். அமைச்சருக்கும், அவரது பரிகாரங்களுக்கும் கிடைக்காதுபோன ஆரவாரம், காப்பகப் பொறுப்பாளர்களான லூர்துமேரியும், இளங்கோவும் மேடை ஏறியபோது, வட்டியும் முதலுமாய் இரண்டு நிமிடம் நீடித்தது.

தமிழ்த் தாயை வாழ்த்தி வரவழைத்த பிறகு, லூர்துமேரி வரவேற்புரை வழங்க வந்தாள். அப்போது வயதுக்கு வராத சிறுமிகள் முதல் வயதில் முதிர்ந்த மூதாட்டிகள் வரை, அவரை தாயாக்கி மகளாக்கி பார்த்தது. கூட்டம் மேரியின் முகத்தையே உன்னிப்பாகப் பார்த்தது. அந்த அம்மாவும், முன் கூட்டியே தயாரிக்கப்பட்ட ஜோக்குகள், ஆவேசங்கள், நீட்டல் முழக்கங்கள் ஆகிய மேடை லட்சணங்கள் ஏதுமில்லாமல், இயல்பாகப் பேசினாள். அமைச்சரையோ, அதிகாரிகளையோ பேரிட்டு அழைக்காமல் நேரிடையாகப் பேசினாள்.

‘அனைவருக்கும் வணக்கம். மேடையில் இருக்கும் நண்பர்களையும், கூட்டமாய் அமர்ந்திருக்கும் உங்களையும், நான் வரவேற்பது, என்னை நானே வரவேற்ப்பது மாதிரி. ஆனாலும் சில புது முகங்கள் கண்ணில் படுவதால், இந்தக் காப்பகத்தைப் பற்றி சுருக்கமாக கூற விரும்புகிறேன்.

“பத்தாண்டுகளுக்கு முன்பு, தர்மபுரியில் நல்லதோர் அரசு வேலையில் பணியாற்றிய என் கணவர் இளங்கோவும், ஆசிரியையாக பணியாற்றிய நானும் மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் தொண்டாற்ற வேண்டும் என்ற உந்தலில் இந்த குட்டாம் பட்டியின் இதே இடத்தில், ஒரு சேவக குடிசை போட்டோம். அன்று உங்கள் ஆசிர்வாதத்துடன் நடப்பட்ட அருகம் புல், இன்று ஆலமரம் போன்ற பிரதான கட்டிடத்தையும், அதன் விழுதுகள் போன்ற கிளைக் கட்டிடங்களையும் கொண்டுள்ளது. அப்போது ஏன் வந்தோம் என்று நினைத்த நாங்கள், இப்போது முன்கூட்டியே வந்திருக்க கூடாதா என்று நினைக்கிறோம்."